தமிழக வெற்றி கழகம் கட்சியை, நடிகர் விஜய் கடந்த 2ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்தார். இப்போது நடித்து வரும் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தை முடித்த பிறகு மதுரையில் கட்சியின் முதல் மாநாடு நடத்த முடிவு செய்துள்ளார். லட்சக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், கட்சி குறித்த முக்கிய விஷயங்களை அறிவிக்க இருக்கிறார்.
நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றி கழகம் கட்சியின் கொள்கைகள், தீர்மானங்கள், மக்கள் நலத் திட்டங்கள், தங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் செய்யப்பட உள்ள மாற்றங்கள் என பலதரப்பட்ட விஷயங்களையும் இந்த மாநாட்டில் விஜய் அறிவிக்க உள்ளார்.
விஜயகாந்துக்கு பிறகு, நடிகர் விஜயும் மக்கள் செல்வாக்குள்ள ஒரு நடிகராக தான் அரசியலுக்குள் வருகிறார். அதனால் நிச்சயம் அவரது வருகை மிகப்பெரிய அளவில் மாற்றத்தை கொண்டு வரும். மக்கள் தரப்பில் இருந்தும் பேராதரவு கிடைக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதற்கு முக்கிய காரணம், ஒரு படத்துக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நம்பர் 1 பொசிஷனில் இருக்கும் விஜய் பணம் மற்றும் புகழ், பதவி ஆசையில் அரசியலுக்கு வர வாய்ப்பில்லை. அவரது இலக்கு தமிழகத்தில் மிகப்பெரிய ஆட்சி மாற்றத்தை கொண்டுவர வேண்டும். மக்கள் நலனில் முன்னேற்றத்தில் அக்கறை உள்ள ஆட்சி நடத்த வேண்டும் என்பதுதான்.
இதற்கு மக்கள் மத்தியில் மட்டுமின்றி, அவர் சார்ந்துள்ள கலைத்துறையிலும் சக நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மத்தியிலும் ஆதரவு இருக்கவே செய்கிறது. தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வந்த இயக்குநர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி, சுவாமியை வழிபட்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது சமுத்திரக்கனி கூறியதாவது, நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தேவைப்பட்டால் நானும் அவருடன் கூட நிற்பேன், என்றார். பிரசாரத்துக்கு விஜய் அழைத்தால் செல்வீர்களா என்ற கேள்விக்கு, அவர் கூப்பிடணும் அப்படீன்னு அவசியமில்லை. மக்களுக்கு நல்லது நடக்கும் என்றால் நானே போவேன். அவர் கூப்பிடணுமுன்னு வெயிட் பண்ற கேரக்டர் நான் இல்லை. நல்ல விஷயம் என்றால், நானே போவேன் என்று கூறியிருக்கிறார் சமுத்திரக்கனி.
Samuthirakani ready to do political work with Vijay





