துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் தற்போது, விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை எடுத்த மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தை எடுத்து வருகிறார். லைக்கா நிறுவனம் இதனை தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார்.
கடந்த ஆண்டு மே மாதமே, இதன் அறிவிப்பு வெளியானாலும் அக்டோபர் மாதம் தான் படப்பிடிப்பு தொடங்கியது. அன்று முதல் அஜர்பைஜான் நாட்டில் முழு வீச்சில் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இதில் அஜித்துடன், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
க்ரைம் திரில்லர் பாணியில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அஜித் தனது 63 வது திரைப்படத்திற்காக, ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணைகிறார். ஆதி ரவிச்சந்திரன் திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
அடல்ட் படமாக உருவான இந்த திரைப்படம், மோசமான விமர்சனத்தை பெற்றாலும், வசூல் ரீதியாக கல்லா கட்டியது. இதனைத் தொடர்ந்து சிம்புவை வைத்து அன்பானவன் அடங்காதவன் அசராதவன் திரைப்படத்தை எடுத்தார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்தத் திரைப்படம் மோசமான விமர்சனத்தை பெற்றது மட்டுமல்லாமல் படுதோல்வியை சந்தித்தது. இந்த திரைப்படம் கொடுத்த அடியால், இயக்கத்தை கைவிட்டு நடிக்க சென்றார் ஆதிக்.
அதன்படி, அஜித்தின் மேற்கொண்ட பார்வை திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அவர் வந்தார். பிறகு பிரபுதேவாவை வைத்து பகிரா என்னும் திரைப்படத்தை எடுத்தார். ஆனால் இந்த படமும் தோல்வியடைந்தது. இந்த நிலையில் கடைசியாக அவர் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யாவை வைத்து எடுத்த மார்க் ஆண்டனி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தன்னை எப்போதும் வெளியில் அஜித் ரசிகராக காட்டிக் கொள்ளும் அவர், தற்போது அவரின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.
இந்த படத்தை தெலுங்கின் முன்னணி நிறுவனமான மைத்திரி நிறுவனம் தயாரிக்கிறது. அனேகமாக இந்த ஆண்டு இறுதியில் இதன் சூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்காக அஜித்குமார் 165 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஜிவி பிரகாஷ் தான் இசையமைப்பதாக தகவல் வெளியானது. தற்போது அவருக்கு மாற்றாக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கப் போவதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே அஜித்திற்கு வீரம் திரைப்படத்திற்காக இசை அமைத்தது குறிப்பிடத்தக்கது.





