தமிழ் திரையுலகில் தற்போது மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது தனுஷின் ஐம்பதாவது திரைப்படம் தான். பவர் பாண்டி திரைப்படத்திற்கு பிறகு, தனுஷ் இயக்கி நடித்திருக்கும் இந்த திரைப்படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.
இது திரைப்படத்திற்காக மொட்டை கெட்டப்பில் தனுஷ் நடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி, அக்டோபரில் நிறைவடைந்தது. ஒரே கட்டமாக படத்தை எடுத்து முடித்து ஆச்சரியப்படுத்தினார் தனுஷ். இதற்கான சூட்டிங் கிழக்கு கடற்கரை சாலையில் செட் போடப்பட்டு எடுக்கப்பட்டது.
வடசென்னையை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை தனுஷ் இயக்கி இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த திரைப்படத்திற்கான போஸ்டர் வெளியானது. அதில், தனுஷ் சந்திப் கிஷன் மற்றும் காளிதாஸ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். மூவரும் சகோதரர்களாக இந்த திரைப்படத்தின் நடிப்பதாக கூறப்படுகிறது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அவர்கள் நடமாடும் ஃபாஸ்ட் ஃபுட் வாகனத்தில் பணிபுரிவது போல் காட்டப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதன்படி எஸ் ஜே சூர்யா மற்றும் செல்வராகவன் ஆகியோர் இருவரும் நடித்திருப்பதாக கடந்த நாட்களில் அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு செல்வவராகவன், தனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு தனுஷிற்கு நன்றி தெரிவித்திருந்தார். அவரை எக்ஸ் வலைதளத்தில் சார் என்றே குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் படம் குறித்து சமீபத்தில் பேசி இருக்கும் காளிதாஸ், தனுஷின் உழைப்பை பார்க்கும் போது கமல் சாரை பார்ப்பது போல் இருந்ததாக தெரிவித்தார்.
தனுஷ் ரசிகர்களுக்கு தரமான சம்பவம் காத்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இப்படியான சூழலில் படத்தில் இடம்பெற்றிருக்கும் அடுத்த நடிகர் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி பிரகாஷ்ராஜ் இந்த திரைப்படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அவர் நடிப்பது பற்றி எந்த ஒரு தகவலும் வெளி வராத நிலையில் இந்த அறிவிப்பு பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.





