தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களின் மிக முக்கியமான நட்சத்திரமாக பார்க்கப்படுபவர் கவின். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே வெள்ளித்திரையில் தோன்றினார். சரவணன் மீனாட்சி என்னும் தொடரில் வேட்டையன் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.
இந்த நாடகம் கிட்டத்தட்ட 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. இதன்பிறகு வெள்ளித்திரையில் சிறு சிறு கதாபாத்திரங்களில் அவர் நடித்திருந்தார். அடுத்ததாக வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது.
அந்த நிகழ்ச்சி கவினுக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுக் கொடுக்க, அவரது கிராப் ஏறு முகத்தில் சென்றது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெளியே வந்த கவின், லிப்ட் திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்ததாக கவின் நடிப்பில் டாடா திரைப்படம் வெளியானது. தந்தைக்கு மகளுக்கும் இடையேயான உறவு, பிரிந்து சென்ற மனைவி உடனான நீங்காத காதல் என அத்தனையும் கச்சிதமாக இந்த திரைப்படத்தில் காட்டியதால் டாடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதுமட்டுமில்லாமல் தனது முதிர்ச்சியான நடிப்பால் பலரது பாராட்டையும் பெற்றார் கவின்.
இந்தத் திரைப்படத்திற்கு பிறகு கவினுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து குவிக்கின்றன. தற்போது அவர் ஸ்டார் என்னும் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதுபோக இயக்குனர் நெல்சன் உதவியாளர் இயக்கும் படத்திலும் நடிக்கிறார். இப்படியான சூழலில், கவின் மீது தயாரிப்பாளர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர்.
ஒரு நாளும் அவர் குறிப்பிட்ட நேரத்திற்கு சூட்டிங் வருவதில்லை என்றும், எப்போதும் கேரவனுக்குள் இருப்பதாகவும் கூறுகின்றனர். கவின் வருவதற்கு முன்பு, பிற நடிகர் நடிகைகளின் போர்ஷன்களை எடுக்க தாங்கள் நிர்பந்திக்கப்படுவதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர். இப்படியான சூழலில் கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கவின், தன்னை 7:00 மணிக்கு தான் வரக் கூறினார்கள் என்றும் ஆனால் ஆறு மணிக்கே கிளம்பி விட்டேன் உங்கள் கல்லூரி வாகனம் வர 6:45ஆகிவிட்டது என்று கூறி அவர்களுக்கும் சேர்த்து மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





