அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் பா ரஞ்சித். தினேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா, கலையரசன் ஆகியோருக்கும் இது முதல் படமாக அமைந்தது. இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. காதல், காமெடி கலந்த ஜாலியான படமாக அட்டக்கத்தில இருந்தது.
தொடர்ந்து கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தை பா ரஞ்சித் இயக்கினார். இந்த படமும் பெரிய வெற்றியை பெற்றது. சுவரில் இருக்கும் ஒரு அரசியல் கட்சி தலைவர் படத்தை அரசியலாக்கி எடுக்கப்பட்ட இந்த படம், பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை, கவனத்தை பெற்றது.
அதன்பிறகு ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக பா ரஞ்சித் மாறினார். கபாலி சூப்பர் ஹிட் படமாகவும், காலா மக்களின் வரவேற்புக்குரிய படமாகவும் அமைந்தது. ஆனால் கபாலி அளவுக்கு காலா வணிகரீதியாக வெற்றி பெறவில்லை.
தொடர்ந்து பா ரஞ்சித் பல படங்களை இயக்கிய நிலையில், கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சியான் விக்ரம் நடித்த தங்கலான் படம் வெளியானது. இந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், தற்போது சென்னையில் நடந்து வரும் 22வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் தங்கலான் படம் திரையிடப்பட்டது.
இந்த விழாவில் பங்கேற்ற இயக்குனர் பா ரஞ்சித் பேசியதாவது, எனக்கு ஒரு விஷயம் இப்போதும் நினைவில் இருக்கிறது. அப்போது நான் 7ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். பள்ளியில் நடந்த ஒரு விழாவில் நாடகத்தில் கலந்துக்கொண்டேன். ஆனால் என்னால் வசனங்களை சரியாக சொல்ல முடியவில்லை.
அதனால் என்னை கேப்டன் பிரபாகரன் படத்தில் நடந்த ஆட்டமா, தேரோட்டமா என்ற பாட்டுக்கு நடனமாட வைத்தார்கள். நான் நன்றாக ஆடியதால் ஒன்ஸ்மோர் கேட்டார்கள். பிறகு நான் உயர்நிலைப் பள்ளியில் படித்த போது கதை எழுத ஆரம்பித்தேன். அப்போதே நடிகர் விஜயகாந்தை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரை வில்லனாக கற்பனை செய்து கதை எழுதியிருக்கிறேன், என்று கூறியிருக்கிறார். ஆனால் கேப்டன் நிஜத்துலயே ஹீரோவா இருந்தவர் ப்ரோ என ரசிகர்கள் அதற்கு கமெண்ட் செய்துள்ளனர்.





