தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் நூற்றுக்கணக்கான கோடிகளில் சம்பளம் வாங்குவதும், 600 கோடி 700 கோடி என ரிலீசான புதுப்படங்கள் வசூலிப்பதையும் பார்த்து, தமிழ் சினிமா வாழ்வாங்கு வாழ்ந்துக்கொண்டு இருப்பதாக நினைத்தால், அதுதான் உண்மையில் இல்லை. தமிழ் சினிமா மிக மோசமான நிலையில் அதலபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதுதான் உண்மை.
தமிழ் சினிமாவில் இப்போது எடுக்கப்பட்டு வரும் படங்கள் ரஜினி, கமல், தனுஷ் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே. இந்த படங்களை தயாரிப்பது பெரிய கார்பரேட் நிறுவனங்கள்தான். சின்ன சின்ன பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களும் இல்லை. சின்ன படங்களின் படப்பிடிப்புகளும் இல்லை. இதனால் சின்ன நடிகர்கள், நடிகைகள், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி தமிழ் சினிமா படங்களை பெரும்பாலும் தயாரிப்பது தெலுங்கு பட தயாரிப்பாளர்கள். தமிழ்பட தயாரிப்பாளர்கள் இல்லை. குறிப்பாக விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்றோர் கமிட் ஆகியுள்ள படங்களை தயாரித்து வருவது அனைத்துமே தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனங்கள்தான். தமிழ் சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் முடங்கிப் போய்விட்டன.
ஏனெனில் ஏற்கனவே பல கோடிகளை போட்டு படம் தயாரித்து, இன்றைய டாப் ஹீரோக்களை தூக்கிவிட்ட அந்த நிறுவனங்களை கண்டுக்கொள்ளாத இந்த நிழல் ஹீரோக்கள், அதிக சம்பளம் தரும் தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனங்களின் பக்கம் சாய்ந்து விட்டனர். அவர்களை வளர்த்துவிட்ட தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் இப்போது கையில் போதிய இருப்பின்றி படங்களை தயாரிக்க முடியவில்லை.
அதே நேரத்தில் தமிழ் சினிமா இயக்குனர்கள் செய்கிற பில்டப்புகளும் கொஞ்ச நஞ்சம் அல்ல. படத்தின் முதல் முகவரியே அந்த படத்தின் டைட்டில்தான். முக்கால்வாசி படப்பிடிப்பு முடியும் வரை, படத்தின் பெயரை சொல்வதில்லை. மணிரத்னம், பாலா போன்ற டைரக்டர்கள் நடிக்கிற நடிகர்களுக்கும், தயாரிப்பாளருக்கும் படத்தின் கதையை சொல்ல மாட்டார்கள். லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்பராஜ், நெல்சன் போன்றவர்களுக்கு கேங்ஸ்டர் கதைகள், போதைப் பொருள் கடத்தல் கதைகளே தெரியும். அதுவும் மற்ற படங்களில் இருந்து காப்பியடித்த கதைகள், காட்சிகள்தான்.
இப்படி தமிழ் சினிமாவை ஆளாளுக்கு பந்தாடிக்கொண்டு இருக்கின்றனர். நூற்றுக்கணக்கான கோடிகளில் சம்பளம் கிடைத்தால் போதும். ஸ்டைலாக நடந்து வந்தும், கண்ணாடியை தூக்கிப் போட்டும், கிளைமாக்ஸில் 300 பேரை அடித்து துவம்சம் செய்தும் நடித்துவிட ரஜினி, விஜய் போன்றவர்கள் தயாராக இருக்கின்றனர். அதனால் தமிழ் இனி மெல்லச் சாகும் என்றதை போல, தமிழ் சினிமா மிக வேகமாக அதலபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதே கசப்பான உண்மை.





