சினிமாவில் நல்ல கதைகளில், நல்ல இயக்குநர்களின் மேக்கிங்கில் ஒரு சிறந்த படத்தில் நடிப்பது என்பது எல்லா நடிகர்களுக்கும் சாதாரணமாக அமைந்து விடாது. பட வாய்ப்பே இல்லாத போது ஏதாவது ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி அட்வான்ஸ் வாங்கி விடுவர். பிறகு சில நாட்களில் பெரிய இயக்குநர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் அதில் நடிக்க முடியாமல் போகும்.
வளரும் காலத்தில், கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்வதே புத்திசாலித்தனம். அப்படிதான் பல நடிகர், நடிகையர் தங்களுக்கான இடங்களை பிடித்திருக்கின்றனர். அதை பல ஆண்டுகளுக்கு பிறகு, அவர்களே நேர்காணல்களில் வெளிப்படையாக கூறுகின்றனர். அந்த வாய்ப்பை தவற விட்டிருந்தால், இந்த இடத்தை வந்து சேர்ந்திருக்க முடியாது என்று கூறுகின்றனர்.
நடிகர் ஸ்ரீகாந்த் கூட சமீபத்தில் ஒரு பேட்டியில், பல நல்ல இயக்குநர்களின் சூப்பர் ஹிட் படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த சூழ்நிலையில் அந்த படங்களில் நடிக்க நான் சம்மதிக்கவில்லை. பிறகு அந்த படங்களில் வேறு நடிகர்கள் நடித்து பெரிய அளவில் ஹிட் படங்களாக அவைகள் வரவேற்பை பெற்றன. அப்போது நான் மிகவும் வருத்தப்பட்டேன் என்று கூறியிருந்தார்.
அதுபோல் நடிகர் அஜீத்குமார் முதலில் நடிக்க சம்மதித்த படம் கஜினி. இந்த படத்தை இயக்கியவர் ஏஆர் முருகதாஸ். இந்த படத்தில் நடிக்க ஓகே சொல்லி, சில வாரங்கள் சஞ்சய் ராமசாமி கெட்டப்பில் நடித்தார் அஜீத்குமார். ஒருகட்டத்தில் மொட்டையடித்து, தலையில் கீறல்கள் போட வேண்டும். உடம்பில், முகத்தில் காயத் தழும்புகள் போல மேக்கப் செய்ய வேண்டும் என்றவுடன், இந்த கேரக்டருக்காக நான் மொட்டையடிக்க வேண்டும். இப்படி என் உருவத்தை காட்ட மாட்டேன் என மறுத்து, நடிக்க மறுத்துவிட்டார் அஜீத்குமார்.
அதன்பிறகு சஞ்சய் ராமசாமி கேரக்டரில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் மறுத்த நிலையில், நடிகர் சூர்யா தானாக முன்வந்து நடித்தார். மொட்டையடித்துக்கொண்டு, டைரக்டர் ஏஆர் முருகதாஸ் கேட்டுக்கொண்படி தன்னை மாற்றிக்கொண்டு நடித்தார். மிகப்பெரிய ஹிட் படமாக கஜினி அமைந்தது. சூர்யாவின் திரை பயணத்தில் ஒரு மைல் கல்லாக கஜினி இருந்தது.
இதே போல், எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த பெரியண்ணா படத்தில் நடிக்க முதலில் அழைப்பு வந்தது நடிகர் அஜீத்குமாருக்குதான். ஆனால் அந்த படத்தில் நடிக்க அஜீத் மறுத்துவிட்டார். இது எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் பெரிய கூட்டணியில் உருவாகிற படம். எனக்கு முதுகில் ஆபரேசன் செய்யப்பட்டுள்ளது. ஷூட்டிங் நேரத்தில் உடம்புக்கு முடியாமல் படுத்துவிட்டால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் நான் நடிக்க முடியாது என மறுத்துவிட்டார். அதன்பிறகுதான் அந்த படத்தில் சூர்யா நடித்திருந்தார். படமும் பெரிய ஹிட் ஆனது. இப்படி கஜினி, பெரியண்ணா என 2 படங்களில் அஜீத் தவற விட்ட வாய்ப்பை சூர்யா பயன்படுத்திக் கொண்டார்.





