படிக்காதவன் படத்தில் சின்ன வயது ரஜினியாக நடித்திருப்பார் சூர்யா கிரண். அதே போல் மௌன கீதங்கள் படத்தில் கே. பாக்யராஜ் மகனாகவும் நடித்திருந்தார். அதே போல் மனிதன் படத்திலும் சின்ன வயது ரஜினிகாந்த் அவர்தான். ரஜினி போலவே முகத்தை வேகமாக திருப்புவது, முறைப்பது, நடப்பது என ரஜினி போலவே ஸ்டைல் காட்டி அசத்துவார் சூர்யா கிரண்.
அதேபோல் மௌன கீதங்கள் படத்திலும், பாக்யராஜ் மகனாக அவரது நடிப்பு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தனது அம்மா சரிதாவிடம், பாக்யராஜூக்கு சப்போர்ட்டாக பேசுவதும், அவருடன் சென்றுவிடுகிறேன் என்று கூறும் காட்சிகளும் மிகவும் ரசிக்கத்தக்கவை. பாக்யராஜ் போலவே சிறுவனாக அவரும் கண்ணாடி அணிந்து நடித்திருப்பார். அதே போல் முந்தானை முடிச்சு படத்தில் 3 சிறுவர்களில் ஒருவராக பள்ளி மாணவராக நடித்திருப்பார்.
இப்படி தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 200க்கும் மேற்பட்ட படங்களில் முன்னணி நடிகர்களுக்கு குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சூர்யா கிரண். சிரஞ்சீவி, நாகார்ஜூனா போன்ற ஸ்டார் நடிகர்களுக்கு குழந்தை நட்சத்திரமாக நடித்த இவரது நிஜப் பெயர் சுப்பிரமணி ராதா சுரேஷ். சினிமாவுக்காக தன் பெயரை சூர்யா கிரண் என மாற்றிக்கொண்டார்.
வளர்ந்து பெரியவரான பின், நடிப்பில் அதிக ஆர்வம் காட்டாமல் டைரக்ட் செய்வதில் சூர்யா கிரண் அதிக ஆர்வம் காட்டினார். கவிதா முதல் கல்பனா வரை என்ற படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். தெலுங்கில் அவர் இயக்கிய நிஜாம் தேடு செஜாபாலி என மிகப்பெரிய வெற்றிப் படத்தை கொடுத்தார்.பிரம்மாஸ்திரம், ராஜூ பாய், தானா 51, அத்தியாயம் 6 ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நடந்த தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார் சூர்யா கிரண். ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு டைரக்ஷன் செய்த படங்கள் சரியாக போகாததால், படங்கள் டைரக்ட் செய்வதை குறைத்துக்கொண்டார். இவரது மனைவி காவேரி. சமுத்திரம் படத்தில் சரத்குமாருக்கு தங்கையாக நடித்தவர். காசி படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்தவர். இருவரும் காதல் திருமணம் செய்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

சமீபமாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூர்யாகிரண், இன்று காலை உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் உயிரிழந்தார். அவரது தங்கை, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த நடிகை சுஜிதா என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணன் மறைவால், தங்கை சுஜிதா மிகவும் வருத்தமடைந்துள்ளார். சூர்யாகிரண் மறைவு, தமிழ் சினிமாத் துறையினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.





