தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை வடிவுக்கரசி. குறிப்பாக இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த முதல் மரியாதை படத்தில் காரவீட்டு பொன்னாத்தா என்ற கேரக்டரில் நடித்த நடிகை வடிவுக்கரசியின் சிறப்பான நடிப்பை யாராலும் மறக்கவே முடியாது. அந்த கேரக்டரில் அவர் வாழ்ந்து காட்டியிருப்பார்.
அதைத் தொடர்ந்து ஏராளமான தமிழ் படங்களில் அம்மா கேரக்டர்களில் வடிவுக்கரசி மிகச்சிறந்த நடிப்பை தந்திருக்கிறார். குறிப்பாக பொங்கலோ பொங்கல் காலம் மாறிப்போச்சு மகராசன் அருணாச்சலம் வேடிக்கை என் வாடிக்கை உள்ளிட்ட ஏராளமான படங்களிலும் டிவி சீரியல்களிலும் அவர் நடித்திருக்கிறார். தொடர்ந்து இப்போதும் சினிமாவில் அவர் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை வடிவுக்கரசிக்கு உடல்நிலை சரியில்லை, அவருக்கு ஏதோ பிரச்சனையாகி விட்டது என்று அவரைப் பற்றிய தவறான தகவல்கள் வேகமாக இணையத்தில் பரவியது. வழக்கம் போல சில யூடியூப் சேனல்களில் அவரை பற்றிய வீடியோக்களும் தவறாக வந்தது. சமீபத்தில் கான்சிட்டி பட விழாவில் பேசிய நடிகை வடிவுக்கரசியின் பேச்சு இணையத்தில் வைரலானது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடிகை வடிவுக்கரசிக்கு என்ன ஆனது என்று பலரும் குழப்பம் அடைந்தனர். அவருடைய நண்பர்கள் அவருக்கு தெரிந்தவர்கள் போன் செய்து அவரை நலம் விசாரித்தனர். இந்த நிலையில் நடிகை வடிவுக்கரசி ஒரு ஆடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த ஆடியோவில் நடிகை வடிவுக்கரசி கூறியிருப்பதாவது, எனக்கு ஏகப்பட்ட தம்பிகள் நண்பர்கள் ரசிகர்கள் ஆதரவு இருக்கும் போது என்ன நடக்கப்போகுது?
நான் நல்லா இருக்கிறேன். காலையில் கமல் சார் போன் பேசி விசாரித்த போது நான் கொஞ்சம் பயந்தேன். நான் இப்ப சினிமா, டிவி சீரியலில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறேன். அடுத்து பிரபு சுகன்யா நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க காரைக்குடிக்கு போக தயாராகிட்டு இருக்கிறேன். அதில் பிரபுவின் அம்மாவாக நடிக்கிறேன்.
சமீபத்தில் கார்த்திகை தீபம் சீரியல் படப்பிடிப்பு முடித்துவிட்டு வந்தேன். எனக்கு இவ்வளவு போன் வருகிறது. என்னைப் பற்றி ஆர்வமாக அக்கறையாக விசாரிக்கிறார்கள். எனக்காக இத்தனை உள்ளங்கள் இருக்கிறது என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது என்று நடிகை வடிவுக்கரசி அந்த ஆடியோ பதிவில் கூறியிருக்கிறார். தொடர்ந்து இதுபோல் வயதான மூத்த நடிகர் நடிகைகள் குறித்த தவறான வதந்தி பரவுவது தொடர்கதையாக உள்ளது.





