இயக்குனர் விஜய் ஆர் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடிக்கும் படம் கஸ்தூரி வீடு. இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் இயக்குனர் விஜய் ஆர் ஆனந்த் பேசியதாவது, நான் பல படங்களுக்கு நிர்வாகத் தயாரிப்பாளராக இருந்திருக்கிறேன். ஒரிசாவுக்கு ஒருமுறை சூட்டிங் சென்றபோது அந்த ஓட்டலில் தமிழ் சேனலே வரவில்லை. ஒரே ஒரு தமிழ் சேனல் மட்டுமே வந்தது. அதை ஆன் செய்த போது ரஜினி நடித்த வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம் என்ற அண்ணாமலை பாடல் ஒலித்தது.
இடையில் ஒரு விளம்பரம் வந்தது. அது ஒரு விழிப்புணர்வு விளம்பரம். அதில் நன்றாக உடை அணிந்து ஸ்டைலாக ஒரு நடிகர் இயக்குனர் வந்தார். அவரை நிறைய படங்களில் பார்த்திருக்கிறோம். அவர்தான் சமுத்திரக்கனி. அப்போது அவரை வைத்து ஏன் ஒரு கதை செய்யக்கூடாது என்று நினைத்தேன். இந்த கதை தோன்றியது. அதே நாளில் பூரி ஜெகநாதர் கோயிலில் எனக்கு இரண்டு விஷயங்கள் கிடைத்தன.
ஒன்று படத்தின் தலைப்பு கஸ்தூரி வீடு என்பது. அந்த பெயரில் திரைப்படமாக எடுப்பது. இன்னொன்று ஹாரர் பேய் படமாக எடுப்பது. முதலில் 50 ஆயிரம் ரூபாய் வைத்து ஆரம்பிக்கப்பட்ட படம்தான் இந்த கஸ்தூரி வீடு. இந்த படத்துக்கு சமுத்திரக்கனி வந்த பிறகு பெரிய படமாக மாறிவிட்டது. ஆரம்பத்தில் அவரை எப்படி அணுகுவது அவரிடம் எப்படி வேலை வாங்குவது என்று எனக்கு பயமாக தயக்கமாக இருந்தது. ஆனால் அனைத்தையும் அவர் மாற்றி அற்புதமாக நடித்துக் கொடுத்தார் என்றார்.
இந்த விழாவில் நடிகர் சமுத்திரக்கனி பேசியதாவது, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புது புது மனிதர்களோடு பயணம் செய்வது இறைவன் நமக்கு கொடுத்த கொடை என்று நினைக்கிறவன் நான். புதுப்புது மனிதர்களை பார்க்க வேண்டும். புது புது படைப்பாளிகளுடன் பயணம் செய்வது எனக்கு அவ்வளவு பிடிக்கும். அப்படித்தான் இந்த படத்திற்கும் நிறைய பேர் உழைத்திருக்கிறார்கள்.
இந்த மாதிரி படங்களுக்கு தான் ஒரு முகம் வேண்டும். அப்படி எல்லோரும் விரும்புவார்கள். யாராவது ஒருவர் முன்னாடி வந்து நிற்க வேண்டும். அப்படி ஒரு ஆசை இருக்கும். நான் இப்போது ஒரு படம் எடுத்திருக்கிறேன். அதற்கு நான் இன்னொரு முகத்தை தேடிக் கொண்டிருக்கிறேன். நான் யாரை தேடுகிறேனோ அவர் ஒரு படம் எடுத்தால் அவர் இன்னொரு முகத்தை தேடுவார். இப்படி மாறி மாறி தேடிக் கொண்டே இருப்பது தான் நம் பயணமாகவே இருக்கும். நான் சரியாக உழைத்தால் ஒரு மேஜிக் நடக்கும்.
அந்த மேஜிக் உள்ளே நாமெல்லாம் இருப்போம். அதை மட்டும் நம்புவோம். யாரும் வந்து எந்த படத்தையும் தூக்கி எல்லாம் கொண்டு வந்து நிறுத்திட முடியாது. நம் வேலையை நாம் 100 சதவீதம் செய்வோம். உண்மையாக உழைப்போம். மக்களுக்கு ஒரு நல்ல விஷயத்தை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று குருநாதர் கே பாலச்சந்தர் சொல்வார். நீ உண்மையா உழைத்தால் அது திரையில் தெரியும். உன் உழைப்புதான் ஒரு பெரிய அரணாக நிற்கும் என்று சொல்லுவார் என்று நடிகர் சமுத்திரக்கனி பேசியிருக்கிறார்.





