நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் தலைவராக வருகிற 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார். இதற்காக உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், சில தினங்களுக்கு முன் அதற்கான செயலியை அவர் அறிமுகப்படுத்தினார். இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள், அந்த செயலியில் தங்களை உறுப்பினராக இணைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜயை பொருத்த வரை, தமிழக அரசியலில் எம்ஜிஆரை போல, விஜயகாந்தை போல தனது வருகை மிகப்பெரிய பிரளயத்தையே ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறார். ஒருமுறை அரசியல் களத்தில் ஜெயித்து, தமிழக முதல்வராகி விட்டால், கடைசி வரை அதே பதவியில் இருக்கும் அளவுக்கு மக்களுக்கு சிறப்பான ஆட்சியை தர வேண்டும் என எதிர்பார்க்கிறார்.
அதனால் தனது கட்சியின் கொள்கைகள், செயல்திட்டங்கள், மக்களுக்கான வளர்ச்சிப் பணிகள், எதிர்கால தமிழகம், கல்வி வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், பெண்களின் முன்னேற்றம், அரசு துறைகளின் செயல்பாடுகள் என பலதரப்பட்ட விஷயங்களையும் அதற்கான வல்லுனர்களுடன் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்.
அதற்காக தொடர்ந்து படங்களில் நடித்து, நேரத்தை அதற்காக செலவழிக்காமல், இன்னும் 2 ஆண்டுகளுக்கு முழுமையாக தன்னை அரசியல்வாதியாக்கி கொள்வதோடு, அரசியல் வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்தும் விதமான முன் ஏற்பாடுகளை, முதல்கட்ட பணிகளை தயார் செய்வதில் விஜய் மிக ஆர்வமாக இருக்கிறார்.
இதற்கிடையே நடிகர் விஜய், புதுச்சேரியில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படப்பிடிப்பில் இருந்த போது, ஒருமுறை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து பேசினார். விஜயின் அரசியல் வருகை குறித்து முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்ததால், அதற்காக மரியாதை நிமித்தமாக விஜய் அவரை சந்தித்ததாக முதலில் கூறப்பட்டது.
ஆனால் இப்போதுதான் அந்த சந்திப்பின் பின்னணி மர்மம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது, புதுச்சேரியில் பீச் ஓரத்தில் 99 ஆண்டுகள் லீசுக்கு என்ற விதிமுறையின் கீழ், மல்ட்டி பிளக்ஸ் சினிமா தியேட்டர் ஒன்று பல கோடி செலவில் விஜய் கட்ட இருக்கிறார். அதற்கான சந்திப்பாக தான் விஜய், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து இருக்கிறார். புதுச்சேரியில் சினிமா தியேட்டர் கட்டும் திடீர் யோசனைக்கும், விஜய் அரசியலுக்கு சம்பந்தமில்லை என்றாலும், அதுவும் இப்போது வைரலாக பரவி வருகிறது.





