1988 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சத்யா. கமல்ஹாசன் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இந்த திரைப்படத்தை இயக்க, கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் இதனை தயாரித்திருந்தது. இதில் கதாநாயகியாக அமலா நடித்திருந்தார்.
இளையராஜாவின் இசையில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாக படமும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. வேலையில்லாமல் பட்டதாரி இளைஞர் படும் துயரத்தையும், சமூக அரசியலையும் அந்த நேரத்திலேயே வெளிப்படையாக காட்டியது இந்த திரைப்படம்.
அதுவும் சத்யா திரைப்படத்தில் கமல்ஹாசனின் கெட்அப் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. முதல் பாதியில் வேலையில்லாமல் கஷ்டப்படும் இளைஞனின் நிலை மற்றும் குடும்பத்தின் நிலைமை ஆகியவற்றை காட்சிப்படுத்தியிருந்த சுரேஸ் கிருஷ்ணா, இரண்டாம் பாதியில் கதாநாயகன் எப்படி ரவுடி ஆகிறான் என்பதை காட்டி இருந்தார்.
அதற்கு பின்புலமாக இருக்கும் அரசியல் சூழலையும் அவர் தெள்ளத் தெளிவாக கூறியிருந்தார். தற்போது வரை கமல் ரசிகர்களின் ஃபேவரைட் திரைப்படங்களில் ஒன்றாக சத்யா இருக்கிறது. இந்த சூழலில் தற்போது சத்யா திரைப்படம் ரீமேக் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டும் அசோக் செல்வன் தான் இந்த திரைப்படத்தில் நாயகனாக நடிப்பதாக கூறப்படுகிறது. அசோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளியான சபாநாயகன் மற்றும் ப்ளூ ஸ்டார் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
கடந்த ஆண்டு அவர் போர் தொழில் திரைப்படத்தில் நடித்திருந்தார். சரத்குமார் உடன் அவர் இணைந்து வந்த காட்சிகள் அனைத்தும் ரசிகர்களின் கைத்தட்டல்களைப் பெற, மிகப்பெரிய அளவில் இந்த திரைப்படம் பேசப்பட்டது. இப்படியான சூழலில், அவர் மீண்டும் போர் தொழில் பட இயக்குனருடன் சேர்ந்திருக்கிறார். இருவரும் இணைந்து தான் சத்யா படத்தின் ரீமேக் பணியில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





