ஒரு சொல் கொல்லும், ஒரு சொல் வெல்லும் என்ற பொன்மொழி அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கைக்கும் ஏற்றதாக இருக்கிறது. அதாவது மனிதர்கள் பேசுகிற வார்த்தைகளில் ஒரு சொல் மற்றவர்களை காயப்படுத்தும். அதே மாதிரியான ஒரு சொல் அவர்களது மனங்களை வெல்லும். அப்படிப்பட்ட சொற்களை பேசிதான் அரசியல்வாதிகள் மக்கள் மனங்களை வெல்கின்றனர்.
நடிகர் வடிவேலுவும் சினிமாத்துறையில் மக்களின் மனங்களை வெல்கிற வகையில், நகைச்சுவையான வார்த்தைகளை பேசி பேசிதான் பெயரும், புகழும், கோடிக்கணக்கில் பணமும் சம்பாதித்தார். அவர் பேசிய டயலாக்குளை, இப்போதும் மக்கள் புழக்கத்தில் பேசி கலாய்த்து வருகின்றனர். ஆனால் இன்று வடிவேலு வாய் திறந்து பேசினால், சர்ச்சைகளை தான் ஏற்படுத்துகிறது.
சில மாதங்களுக்கு முன் சந்திரமுகி 2 படப்பிடிப்புக்கான, படத்தில் நடித்த ராதிகா, ராதிகா மகன் ரோஹித், வடிவேலு உள்பட படத்தில் நடித்த சக நடிகர், நடிகைகள் படக்குழுவினர் என அனைவரும் விமானத்தில் பயணித்துள்ளனர். அப்போது வடிவேலுவிடம் பேசிய சரத்குமார் – ராதிகா தம்பதியின் மகன் ரோஹித், அப்பாவும் நீங்களும் நடித்த படங்கள், காமெடி காட்சிகள் சூப்பராக இருக்கும். மீண்டும் அப்பாவும், நீங்களும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று தன் ஆசையை கூறியிருக்கிறார்.
இதற்கு அப்படியா தம்பி, சந்தோஷம். நிச்சயம் நானும் அவரும் சேர்ந்து நடிப்போம் என்று அந்த இடத்தில் கூறுவதுதான் ஒரு மரியாதையான பதிலாக இருந்திருக்கும். ஆனால் வடிவேலு அப்படி பேசவில்லை. உங்கப்பா ஒரு அரசியல்வாதி. அரசியல்வாதிக்கு எல்லாம் நான் வாழ்க்கை கொடுக்க முடியாது என, ஒரு திமிரான, எகத்தாளமான பதிலை தந்து கெத்து காட்டியிருக்கிறார் வடிவேலு.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ராதிகா, நான் எப்போ்ப்பட்ட நடிப்பு குடும்பத்தில் இருந்து வந்தவள், என் கணவர் எத்தனை சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். அப்படிப்பட்ட என் கணவர் சரத்குமாரை, வடிவேலு எப்படி இப்படி தரக்குறைவாக விமர்சித்து பேசலாம் என கோபத்தில் திட்டியிருக்கிறார். அதற்கும் பயந்துதான், அவர் போட்டியிடும் விருதுநகர் தொகுதியில் பிரசாரம் செய்ய போகவில்லை என வடிவேலு பின்வாங்கியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் மாமன்னன் போன்ற ஒரு கேரக்டரில் நடித்ததால், வடிவேலுவை ஏற்றுக்கொண்ட ரசிகர்கள், மீண்டும் அவர் காமெடியில் நடிப்பதை விரும்பவில்லை. இந்த சூழலில் வடிவேலுவை தேர்தல் பிரசார களத்தில் இறக்கி விட்டதால், திமுகவுக்கும் பெரிய அளவில் ஓட்டு கிடைக்க போவதில்லை. இது தெரிந்தும் அவரை திமுக களத்தில் இறக்கி விட காரணம், பிரசாரம் செய்ய வேறு நடிகர்கள் யாரும் இல்லை. தவிர, வந்த வரை வருமானத்துக்கு லாபம், பட வாய்ப்பும் இல்லை என்பதால் வடிவேலுவும் சம்மதித்து இருக்கிறார் என்று பின்னணி தகவல்கள் கூறுகின்றன.





