நடிகர் சூர்யா நடித்து வரும் படங்கள் இப்போதைக்கு எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நேற்று முன்தினம் அவர் அறிவித்த கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் துவங்கும் படப்பிடிப்பில் சூர்யா நடிக்கலாம். ஆனால் நியாயமாக சூர்யா இப்போதைக்கு 3 படங்களில் நடித்திருக்க வேண்டும். ஆனால் சந்தர்ப்ப சூழலால் 3 படங்களையும் அவர் இழந்துவிட்டு நிற்கிறார்.
இது சூர்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கிறது.
சூர்யா நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கிய இந்த படம்தான், இப்போதைக்கு சூர்யாவுக்கு முக்கிய துருப்பு சீட்டாக இருக்கிறது. ஏனெனில் தொடர்ந்து தோல்வி படங்களை தந்துவந்த அவருக்கு, கங்குவா படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக, திருப்புமுனையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக நந்தா, சிங்கம், கஜினி, அயன் போன்ற ஒரு முக்கிய படமாக சூர்யாவின் திரைபயணத்தில் இருக்கும் என்றும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. அதனால் அந்த படத்தின் விஎப்எக்ஸ் மற்றும் சிஜி பணிகளை மிக துல்லியமாக செய்யுமாறும், அதற்காக படம் சற்று தாமதமானால் தவறில்லை என்றும் சூர்யா, சிறுத்தை சிவாவிடம் அறிவுறுத்தி இருக்கிறார்.
பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தை விட்டு சூர்யா விலக காரணம், அவர்களுக்குள் ஏற்பட்ட ஈகோ பிரச்னை என்று கூறப்படுகிறது. அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் இருந்து சூர்யா விலக காரணம், அவரது ஹாலிவுட், பாலிவுட் படங்களின் தேதி விவகாரம்தான் என்றும் கூறப்படுகிறது. ஆனால் சுதா கொங்காரா படத்தில் இருந்து சூர்யா விலக மூன்று, நான்கு காரணங்களாக சொல்லப்படுகிறது. அதில் இதுவும் ஒரு முக்கிய காரணம் என்று தெரிய வந்துள்ளது.
அதாவது இந்த படத்தின் கதை இந்தி எதிர்ப்பை மையமாக கொண்டிருக்கிறது. படத்தின் கதைக்களம் உள்ள காலகட்டத்தில், இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பது போன்று இது அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மும்பையில் குடும்பத்துடன் குடியேறிய சூர்யா, இந்தியை எதிர்த்து நடித்தால் அவரது சினிமா பயணம் நிச்சயம் பாதிக்கப்படும் என்பதும் உண்மை. அதனால் படத்தில் பல திருத்தங்கள் சூர்யா சொன்னதால்தான் சுதா கொங்காரா விலகியிருப்பதும் உண்மைதான்.
இந்த காரணங்கள் மட்டுமின்றி, புறநானூறு படத்தின் இப்போதைய பட்ஜெட் 60 கோடி ரூபாயை தாண்டியிருக்கிறது. இன்னும் சூர்யா சம்பளம், விளம்பரங்களுக்கான செலவு, வட்டி உள்ளிட்டவை கணக்கிப்படவில்லை. இதை எல்லாம் கணக்கிட்டால் படத்தின் பட்ஜெட் 100 கோடி ரூபாயை தாண்டிவிடும். அவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்து சொதப்பி விட்டால், அந்த பயம் காரணமாகவும் இந்த படத்தை டிராப் செய்துள்ளனர். ஏனெனில் சூர்யாவின் தோல்வி படங்கள் லிஸ்ட்டில் இதுவும் இணைந்து விட்டால் என்ன செய்வது என்றும் ஒரு தகவல் தெரிய வந்துள்ளது.





