தமிழ் சினிமாவில் வில்லன் நடிப்பில் ரசிகர்களை மிரட்டிய நடிகரின் சொத்துகளை முடக்க, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளார். இதற்காக நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை எடுக்க ஆயத்தமாகி வருவது, கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாரை தப்பட்டை, மருது உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர் ஆர்கே சுரேஷ். இவர் பாஜக கட்சியிலும் நிர்வாகியாக இருக்கிறார். பாலா இயக்கத்தில், சசிக்குமார் நடித்திருந்த தாரை தப்பட்டை படத்தில், மிக கொடூரமான வில்லனாக நடித்திருந்தார். அதே போல், மருது படத்திலும் இவரது வில்லன் நடிப்பு மிரட்டலாக இருந்தது.
தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த இவர், பாஜக கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட நிலையில், திடீரென காணாமல் போனார். அவர் துபாயில், பல மாதங்களாக தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரை தேடி வருவதால்தான்.
சென்னையை தலைமையிடமாக கொண்ட ஆருத்ரா நிறுவனம், வாடிக்கையாளர்களுக்காக அதிக வட்டி தருவதாக கூறி, 2,438 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.இதையடுத்து, 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அதில் 22 பேரை கைது செய்துள்ளனர்.
இதில், ஆருத்ரா நிறுவனத்தில் 12 கோடி ரூபாய் வாங்கிய ஆர்.கே சுரேஷ் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், அவருக்கு போலீஸ் தரப்பில் பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை. பல மாதங்களாக துபாயில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, ஆர்கே சுரேஷின் சொத்துக்களை முடக்க, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றனர். அவரை காணவில்லை என்ற விளம்பரம் கொடுத்த பிறகும் அவர் நேரில் வராததை அடுத்து, போலீசார் சட்டப்படியான இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்,





