2024 வது வருடம் தமிழ் சினிமாவிற்கு மிக முக்கியமான வருடம் என்றே கூறலாம். கோலிவுட்டில் கோலோச்சி இருக்கும் பிரபலமான நடிகர்கள் பலருக்கும், இந்த வருடம் திரைப்படங்கள் வெளியாகிறது. குறிப்பாக ரஜினிக்கு வேட்டையன் திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இதேபோல் கமல் நீண்ட நாட்களாக நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படமும் இந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதே போல், ஆறு மாதங்களுக்கு மேலாக சூட்டிங் நடைபெற்று வரும் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படமும் இந்த ஆண்டு வெளியாவது உறுதியாகி இருக்கிறது.
இந்த வரிசையில் விஜயின் கோட், சூர்யாவின் கங்குவா, விக்ரமின் தங்கலான், தனுஷின் ராயன் உள்ளிட்ட திரைப்படங்களும் இணைந்துள்ளன. இதில் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.
மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே இந்த திரைப்படத்தில் நடித்துள்ளது. பிரபுதேவா பிரசாந்த் மைக் மோகன் சினேகா லைலா மீனாட்சி சவுத்ரி பிரேம்ஜி அமரன் யோகி பாபு வி டிவி கணேஷ் வைபவ் அஜ்மல் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இது மட்டுமல்லாமல் த்ரிஷாவும் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.
இந்த பாடல் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் சூர்யாவின் கங்குவா திரைப்படமும், ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. இதன் சூட்டிங் பணிகள் நிறைவடைந்த சூழலில் தற்போது, போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், விஜயின் கோட் மற்றும் சூர்யாவின் கங்குவா ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் ரிலீஸாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விஜயின் கோட் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே போல் கங்குவாவும் அதே மாதம் ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2011 ஆம் ஆண்டு, தீபாவளி தினத்தில் விஜயின் வேலாயுதம் மற்றும் சூர்யாவின் ஏழாம் அறிவு ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி இருந்தன. இப்படியான சூழலில் தற்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரு நடிகர்களின் திரைப்படங்களும் மோதிக்கொள்ள இருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.





