நடிகர் விஜய் இப்போது த கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் கடந்த 10 நாட்களாக ஷூட்டிங் நடந்து வருகிறது. ஏறக்குறைய படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் இருக்கிறது. இன்னும் சில தினங்களில் படக்குழு சென்னை திரும்பவும் அதிக வாய்ப்புள்ளது. அங்கு திருவனந்தபுரத்தில் விஜய்க்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்து, தங்களது உற்சாகத்தை தெரிவித்து வருகின்றனர்.
த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது. திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை திரும்பும் படக்குழு மீண்டும் ரஷ்யாவுக்கு செல்லுமா, அல்லது திருவனந்தபுரத்திலேயே அந்த படப்பிடிப்பையும் சேர்த்து முடித்து விட்டார்களா, என்பது வரும் நாட்களில் தெரிந்து விடும்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக ஆன பின், இன்னும் ஒரே படத்தில் மட்டுமே நடிப்பேன் என ஏற்கனவே அறிவித்து விட்டார். அதாவது இப்போது நடித்து வரும் வெங்கட்பிரபு படத்தை அடுத்து மீண்டும் ஒரு படம் என்பதோடு அவர் தமிழ் சினிமாவை விட்டு விட விலகிவிட முடிவு செய்திருக்கிறார். அதனால் அவரது அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஏனெனில் அந்த படத்தை ஆர்ஆர்ஆர் படத்தை தயாரித்த டிவிவி எண்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம்தான் தயாரிக்க உள்ளது. அதனால் பான் இந்தியா படமாக மிகப்பெரிய பொருட்செலவில் படம் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த படத்தில் விஜய் சம்பளம் மட்டுமே ரூ. 250 கோடியாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் இயக்குனர் யார் என இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
படத்தின் இயக்குனர் எச் வினோத் என்று ஒரு தரப்பில் கூறப்பட்டாலும் இன்னும் அது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே அட்லி பெயரும் அடிபடுகிறது. தெறி, மெர்சல், பிகில் என விஜய்க்கு 3 மெகா ஹிட் படங்களை கொடுத்ததால், விஜய்க்கு அட்லி மீது ஒரு சாப்ட் கார்னர் இருப்பதால், தன் கடைசி படத்தை அவரும் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இவர்களை போல, இயக்குனர் வெற்றிமாறன் பெயரும் ஆரம்பத்தில் இருந்தே சொல்லப்பட்டு வருகிறது. இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் வெற்றி மாறனிடமே விஜய் படத்தை நீங்கள் இயக்குவதாக செய்தி உள்ளதே என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வெற்றிமாறன், நானும் அந்த செய்தியை பார்த்தேன். விஜயும் அந்த செய்தியை பார்த்திருப்பார். தெரியவில்லை என்ன நடக்கப் போகிறது என்று, என விசு பாணியில் ஒரு பதிலை தந்திருக்கிறார். அது இப்போது வைரலாகி வருகிறது.





