நடிகர் விஜய் இப்போது தனது 68வது படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படத்தை டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த மாதத்தில் 20ம் தேதிக்குள் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்போது ரஷ்யாவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து விஜய், தனது 69வது படத்தில் நடிக்கிறார். இதுதான் அவரது கடைசி படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கியுள்ள விஜய், பிறகு முழுநேர அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளதால், சினிமாவில் நடிக்க வர மாட்டேன் என்று கூறிவிட்டார்.
இந்நிலையில் விஜய் 69 படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி இரண்டு மாதங்களாக நீடித்த நிலையில், இப்போது அது எச் வினோத் தான் என உறுதியாகி விட்டது. இந்த படத்தை ஆர்ஆர்ஆர் படத்தை தயாரித்த டிவிவி எண்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் விஜய் சம்பளம் ரூ. 250 கோடி என்றும் கூறப்படுகிறது.
நடிகர் விஜய் இப்போது நடித்து வரும் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் சினேகா, மீனாட்சி சௌத்ரி என 2 கதாநாயகிகள் நடித்துள்ளனர். இதில் அப்பா, மகன் என்ற 2 கேரக்டர்களில் விஜய் நடித்து வருவதால் அப்பாவுக்கு சினேகாவும், மகனுக்கு மீனாட்சி சௌத்ரியும் நடித்துள்ளனர். அதுதவிர கனிகா, லைகா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
அதே போல் விஜய் 69 படத்தை எச் வினோத் இயக்குவது என்பது முடிவான நிலையில், இந்த படத்தின் துவக்க விழா பூஜையுடன் ஷூட்டிங், வரும் ஜூன் 22ம் தேதி, விஜய் பிறந்த நாளன்று சென்னையில் துவங்குகிறது. பிரசாத் ஸ்டுடியோவிலும் பிறகு, 30 நாட்கள் ஐதராபாத்திலும் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் அதாவது டிசம்பர் 31ம் தேதிக்குள் முடிக்கவும் விஜய் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பது யார் என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது. இதில் 4 பேர் மிக ஆர்வமாக உள்ளனர். விஜயுடன் குருவி, ஆதி, திருப்பாச்சி, கில்லி, லியோ படங்களில் நடித்த திரிஷா அல்லது கத்தி, தெறி, மெர்சல் படங்களில் விஜயுடன் நடித்த சமந்தா ஆகிய இருவரில் ஒருவராக இருக்கலாம் என்றும், அல்லது ஆலியா பட், மிருணாள் தாகூர் ஆகியோரில் ஒருவராக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதில் விஜய் யாரை ஓகே சொல்லி டிக் அடிக்கப் போகிறார் என்பதும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.





