தமிழ் சினிமாவின் மூத்த கலைஞர் நடிகர் கமல்ஹாசன். ராஜ்யசபா எம்பியாகவும் இருந்து வருகிறார். அவரது மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இவர் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சினிமாவில் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் எப்போதும் பிஸியாக இருந்து வருகிறார்.
ஸ்ருதிஹாசன் ஒரு பிரபல நடிகை மட்டுமல்ல. சிறந்த பின்னணிப் பாடகியாகவும் உள்ளார். தனது இசை ஆல்பங்கள் மூலமாகவும் ரசிகர்களிடம் பிரபலமானவர். இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது பெயர் படம் வீடியோ உருவம் மற்றும் ஆளுமை உரிமைகளை பாதுகாக்க கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் தன்னல வழக்கு ஒன்றை தொடர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து நடிகை ஸ்ருதிஹாசன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, செயற்கை நுண்ணறிவு ஏஐ மற்றும் டீப்பேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனது முகத்தை மார்பிங் செய்து ஆபாசமான முறையில் புகைப்படங்கள் வீடியோக்கள் உருவாக்கப்பட்டு இணையத்தில் வைரலாகப்படுகிறது.
எனது அனுமதியின்றி என்னுடைய பெயர் மற்றும் என்னுடைய படத்தை பயன்படுத்தி இணையத்தில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதுடன் போலியான விளம்பரங்களும் வெளியிடப்படுகிறது. இந்த நிறுவனங்களிடம் இருந்து எனக்கு 15 கோடி ரூபாய் நஷ்ட ஈடு பெற்று தரவேண்டும் என்று நடிகை ஸ்ருதிஹாசன் தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் அந்த மனுவோடு சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் பட்டியலையும் இணைத்து அவர் தாக்கல் செய்திருக்கிறார். நடிகை ஸ்ருதிஹாசன் மட்டுமின்றி முன்னணி நடிகைகள் பலரும் இதுபோன்ற பாதிப்புகளை தொடர்ந்து சமூக வலைதளங்களில் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று பாலிவுட் நடிகை தபுவும் டில்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. நடிகை தபு தொடர்புடைய பேஸ்புக் இன்ஸ்டாகிராம் ரெட்டிட் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அவதூறு உள்ளடக்கங்கள் புகைப்படங்கள் காணொளிகளை உடனடியாக நீக்க டில்லி கோர்ட் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.





