கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு வித்தியாசமான நகைச்சுவை வினோதமான கேரக்டர்கள் மற்றும் வித்தியாசமான கதை சொல்லல் ஆகியவற்றின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்ற படம் மூடர்கூடம். தற்போது இந்த படம் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது.
மூடர் கூடம் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் நவீன் இரண்டாம் பாகத்தையும் அவரே எழுதி இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் அவருடன் ஓவியா சென்ட்ராயன் ராஜாஜி குபேரன் மற்றும் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். படத்துக்குஅம்ப்ரீஷ் இசையமைத்துள்ளார். நடராஜன் சங்கரன் பின்னணி இசை அமைத்துள்ளார்.
மூடர் கூடம் இரண்டாம் பாகம் படம் குறித்து இயக்குனர் நவீன் கூறியதாவது, மூடர் கூடம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான திரைப்படம். பல ஆண்டுகளாக இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் தொடர்ந்து என்னிடம் கேட்டு வந்தனர். வெறுமனே சீக்வலுக்காக நான் இந்த படத்தை உருவாக்க விரும்பவில்லை.
ரசிகர்களை மீண்டும் ஆச்சரியப்படுத்தும் ஒரு கதையை தான் தேடிக் கொண்டிருந்தேன். மூடர் கூடம் 2 மிஷன் பாசிபிள் அப்படி ஒரு கதையாக அமைந்தது. ரசிகர்கள் விரும்பிய நகைச்சுவையை தக்கவைத்துக் கொண்டு கதாபாத்திரங்களையும் கதை சொல்லலையும் இன்னும் பெரிய அளவுக்கு கொண்டு சென்றுள்ளோம்.
முதல் பாகத்தில் தனித்துவமான டார்க் காமெடி மற்றும் கதை சொல்லலை தக்க வைத்துக்கொண்டு அதிரடி கற்பனை மற்றும் உலகளாவிய பின்னணியுடன் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தாலி ஜெர்மனி சுவிட்சர்லாந்து ஆஸ்திரியா குரேஷியா ஸ்லோவேனியா மற்றும் கசகஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது.
படத்தின் காட்சி அமைப்பு மற்றும் விஎஃப்எக்ஸ் பணிகளை ஹாலிவுட்டின் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட அமெரிக்க குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். அதிரடி காட்சிகளும் சர்வதேச தரத்தில் உருவாகியுள்ளன. இதன் மூலம் பார்வையாளர்களுக்கு சிறந்த திரையரங்க அனுபவம் கிடைக்கும் என்று மூடர் கூடம் 2 படம் குறித்து இயக்குனர் நவீன் கூறியிருக்கிறார்.





