நடிகர் விஜய், நடிகர் அஜீத்குமார் இருவருமே சமகாலத்தில் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர்கள்தான். இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் மகன் என்பதால், சின்ன வயதில் இருந்தே தன் மகனின் சினிமா ஆர்வத்தை புரிந்துக்கொண்ட அவர், நாளைய தீர்ப்பு என்ற படத்தை அவரே டைரக்ட் செய்து மகனை நடிக்க வைத்தார். ஆனால் விஜய்க்கு, முதல் படம் வெற்றியை தரவில்லை.
அதே போல் அஜீத்குமார் சினிமாவில் நடிக்க வந்தது விளம்பரம் ஒன்றில் நடித்துதான். அதை பார்த்துதான் ஆசை படத்தில் அவரை இயக்குனர் வசந்த் நடிக்க வைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் வசந்த் இயக்கிய நேருக்கு நேர் படத்தில் விஜய், அஜீத்குமார் நடிக்க வேண்டிய சூழல் வந்தது. சில காட்சிகளில் நடித்து விட்டு அஜீத் வெளியேறியதால், அந்த கேரக்டரில் சூர்யா நடித்தார்.
ஆனால் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் விஜய், அஜீத்குமார் இருவரும் இணைந்து நடித்தனர். ஒரே அறையில் தங்கியிருக்கும் நண்பர்களாக நடித்த இந்த படத்தில், அஜீத்குமார் ஒரு பெண்ணை சின்சியராக காதலிப்பார். இறுதியில் அந்த பெண்ணின் காதல் தோல்வி அடைவதால் தற்கொலை செய்துக்கொள்வது போன்று இந்த படத்தின் காட்சி இருந்தது. பெரிய அளவில் இந்த படம் வரவேற்பை பெறவில்லை.
அதன்பிறகு விஜய், அஜீத்குமார் அவரவர் பாதைகளில் தனித்தனியாக பயணித்தனர். காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக போன்ற படங்களில் நடித்து விஜய் ஒருபுறம் பெரிய நடிகராக வளர்ந்தார். ஆசை, காதல் கோட்டை போன்ற படங்களில் நடித்து மறுபுறம் அஜீத்குமாரும் முக்கிய நடிகராக மாறினார்.
ஆனால் இருவரும் மீண்டும் சேர்ந்து இதுவரை ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. இப்போது விஜய் 69 படத்துடன் தனது நடிப்பு பயணத்தையே நிறைவு செய்துக்கொள்ள விஜய் திட்டமிட்டு இருக்கிறார். அதனால் விஜய், அஜீத்குமார் மீண்டும் இணைந்து நடிப்பது என்பது நடக்காத காரியம் என்று தெரிய வருகிறது.
ஆனால் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் ராஜகுமாரன், நான் இயக்கிய நீ வருவாய் என படத்தில், அஜீத்குமார் நடித்திருந்தார். அந்த படத்தில் பார்த்திபன் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது விஜய்தான். ஆனால் வேறு படங்களில் நடிக்க கமிட் ஆகி இருந்ததால் அஜீத்குமாருடன் நடிக்க விஜய் மறுத்துவிட்டார். இல்லை என்றால் அஜீத், விஜய் இணைந்து நடித்த முக்கிய வெற்றிப் படமாக அது இருந்திருக்கும், என ராஜகுமாரன் கூறியிருக்கிறார். இவர் நடிகை தேவயானியின் கணவர் என்பது கூடுதல் தகவல்.





