தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி நடிகராக இருந்து பிறகு ஹீரோவாக மாறியவர் ஆர்ஜே பாலாஜி. அதன்பிறகு நடிகர் சூர்யா நடித்த கருப்பு படத்தை அவரே டைரக்ட் செய்திருந்தார். இந்த படம் கடந்த மாதம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. ரூ. 340 கோடி வரை வசூலை அள்ளியுள்ளது.
கருப்பு படத்தின் தொடக்க விழா பூஜை கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோவிலில் நடந்தது. படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து இயக்குனர் ஆர்ஜே பாலாஜி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்து மனமுருக வழிபட்டார்.
அம்மன் சன்னதி முன்பு தரையில் விழுந்து வணங்கிய ஆர்ஜே பாலாஜி கோயில் கொடிமரத்தையும் தொட்டு வணங்கினார். அதன்பிறகு கோவிலை சுற்றி வலம் வந்து பிரகார தெய்வங்களையும் வழிபட்டார். கோவிலுக்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள் ஆர்ஜே பாலாஜியுடன் போட்டி போட்டுக் கொண்டு செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி கூறியதாவது, மாசாணி அம்மன் கோவிலில் முதல் பூஜை செய்த பிறகுதான் கருப்பு படத்தை தொடங்கினோம். மேலும் இந்த படத்தின் கதைக்கரு மாசாணி அம்மனை சார்ந்து அமைந்ததுதான். பொள்ளாச்சி சேர்ந்த நண்பர் அருண் என்பவருடன் ஒரு தடவை இந்த கோவிலுக்கு வந்திருந்தேன். அப்போது அவர் கோவிலில் மிளகாய் அரைத்து மாசாணி அம்மன் வழிபடுங்கள் அண்ணா. தீராத பிரச்சனைகள் பகைகள் மற்றும் வழக்குகள் எல்லாம் தீரும் என்று சொன்னார்.
கருப்பு படத்தின் கதைக்கரு கோர்ட்டை சுற்றியே அமைந்தது. அதனால் படத்தின் அம்சங்களை விரிவுபடுத்த திட்டமிட்ட போதுதான் எனக்கு மாசாணி அம்மன் நினைவுக்கு வந்தது. தொடர்ந்து அம்மனிடம் அனுமதி கேட்டு படம் எடுக்க முடிவெடுத்தோம். பின்னர் மாசாணி அம்மன் முன்பு படத்தை பூஜை போட்டு தொடங்கினோம். கருப்பு படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து மாசாணி அம்மனுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இங்கு குடும்பத்துடன் வந்துள்ளோம்.
கருப்பு பட வெற்றிபெறும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் நாங்கள் நினைத்ததை விட 100 மடங்கு வெற்றி கிடைத்துள்ளது. முதலமைச்சர் விஜய் பதவியேற்ற 4வது நாளில் கருப்பு படத்தை வெளியிட்டோம். அதன்பிறகு அவரை நேரில் சந்தித்தோம். எங்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சராக விஜய் பதவி ஏற்றது திரைத்துறைக்கு மட்டுமின்றி அனைத்து துறைகளுக்கும் நல்லது என்று நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி கூறியிருக்கிறார்.





