தமிழ் சினிமாவில் எடுக்கப்படும் படங்கள், சின்ன பட்ஜெட் படங்களாக இருந்தாலும், பெரிய பட்ஜெட் படங்களாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தில் தயாரிக்கப்பட்டு, அந்த படங்கள் தியேட்டர்களுக்கு வருகின்றன. குறிப்பிட்ட தேதிகளை முன்னரே அறிவித்து, தியேட்டர்களில் படங்கள் ரிலீஸ் செய்யப்படுகின்றன.
தயாரிப்பாளர்களிடம் இருந்து, விநியோகஸ்தர் மூலமாக தியேட்டர்களுக்கு அந்த படங்கள் விநியோகம் செய்யப்பட்டு, குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் ஆகின்றன. இதுதான் நடைமுறை வழக்கமாக இருந்து வருகிறது. இதில் குறிப்பிட்ட ஷேர் தியேட்டர் உரிமையாளர்களுக்கு தரப்படுகிறது. முதல் 40 – 60, பிறகு 60-40 எனவும் கூறப்படுகிறது. கடந்த முறை இதை 75- 25 என மாற்றியதால், பெரும் பிரச்னை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019ம் ஆண்டில் கொரோனா தொற்று காலத்தில் (கோவித் 19) காரணமாக, சினிமா தியேட்டர்கள் அனைத்தும், தொற்று நோய் பரவிய காரணத்தால் மூடப்பட்டன. தியேட்டர்கள் மூடப்பட்டதால் மக்கள் படம் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டது. அப்போது ரிலீஸக்கு தயாராக இருந்த படங்களும், வருட கணக்கில் தியேட்டர்களுக்கு வராத ஒரு சூழல் ஏற்பட்டு, நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நடிகர் சூர்யா போன்ற சிலர், தங்களது படங்களை ஓடிடி தளங்கள் மூலமாக வெளியிட தயாராகினர். ஆனால், இத்தனை ஆண்டுகளாக நடிகர்கள், சினிமாத்துறையினர் தியேட்டர்களை நம்பி வாழ்ந்த நிலையில், இப்போது ஓடிடி என்ற புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தங்களது படங்களை ரிலீஸ் செய்வதற்கு, தியேட்டர் உரிமையாளர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். இனிமேல் சூர்யா படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்வதில்லை என்றும் ஒரு முக்கிய தீர்மானத்தை எடுத்தனர். அதன் பிறகு இந்த பிரச்னைகள் எல்லாம் சமரசம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்று காலத்தில், ஓடிடி தளங்களில் பல படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டன. அதில் சில படங்கள் மிகச்சிறந்த படங்களாக நல்ல படைப்புகளாக இருந்தன. ஆனால் ஓடிடியில் இப்படிப்பட்ட பல நல்ல படங்களை ரசிகர்கள் பார்க்க முடியாமல் போனது. இந்நிலையில் அந்த படங்களை இப்போது மீண்டும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்தால் தியேட்டர்களில் அந்த படங்களை பார்க்கும் அனுபவமும், தியேட்டர்களில் தங்கள் அபிமான நடிகர்கள் படங்களை பார்க்கவும் ரசிகர்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படும்.
ஆனால் இந்த விஷயத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் வீம்பு செய்கின்றனர். ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆன படங்களை நாங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யமாட்டோம். அது எங்களுக்கு இழுக்கு என்ற நிலையில் அவர்கள் ஈகோ பார்த்து வருகின்றனர். இதனால் பாதிக்கப்படுவது ரசிகர்கள் மட்டுமல்ல, தியேட்டர் உரிமையாளர்களும் தான். ஏனெனில் இப்போது தியேட்டர்களில் பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகி வருகின்றன. சின்ன பட்ஜெட் படங்கள் இல்லாத நிலையில் இப்படி ஏற்கனவே ஓடிடியில் ரிலீஸ் ஆன படங்களை மறுபடியும் தங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதன் மூலம் ஒரு கணிசமான லாபத்தை பெற முடியும் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.





