நடிகர் நெப்போலியன் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு நடிகராக பல படங்களில் நடித்தவர். கடந்த 1991ம் ஆண்டில் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் புது நெல்லு புது நாத்து என்ற படம் மூலம் நடிகர் நெப்போலியன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து எஜமான் படத்தில் வல்லவராயன் என்ற கேரக்டரில் ரஜினிக்கு வில்லனாக நடித்து பெரிய அளவில் வரவேற்பை பெற்றார். தொடர்ந்து சீவலப்பேரி பாண்டி கரிசக்காட்டு பூவே எட்டுப்பட்டி ராசா உள்ளிட்ட பல படங்களில் நெப்போலியன் நாயகனாகவும் நடித்தார்.
கிட்டத்தட்ட தமிழில் 100 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் நடிகர் நெப்போலியன் ஒரு கட்டத்தில் திமுக கட்சியில் இணைந்தார். பார்லிமென்ட் தேர்தலில் நின்று திமுக எம்பி யாகவும் வெற்றி பெற்றார். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக அரசியலை விட்டு முற்றிலும் விலகி தனது குடும்ப நலனுக்காக அமெரிக்கா சென்று குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார்.
நடிகர் நெப்போலியனுக்கு ஜெயசுதா என்ற மனைவியும் குணால் தனுஷ் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இதில் தனுஷ் 4 வயதாக இருக்கும்போதே தசை சிதைவு நோய் தாக்கியது. இதற்காக மருத்துவ சிகிச்சைகள் பெற்று ஓரளவு தனுஷ் குணமடைந்தார்.
இதற்கிடையில் திருநெல்வேலி மூலக்கரைப்பட்டி சேர்ந்த விவேகானந்தர் மகள் அக்சயாவுக்கும் தனுசுக்கும் ஜப்பானில் சமீபத்தில் திருமணம் நடந்தது. இந்த திருமண விழாவில் தமிழ் சினிமா நடிகர் நடிகைகள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த சூழலில் நெப்போலியனின் மகன் தனுஷ் உடல்நிலை குறித்தும் அக்சயா குறித்தும் சமூக வலைதளத்தில் தொடர்ந்து பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருகின்றன.
இதுகுறித்து தனது மகன் மற்றும் மருமகள் பற்றி அவதூறு பரப்பப்படுவதாக நடிகர் நெப்போலியன் தரப்பில் அவரது சகோதரர் கிருபாகரன் என்பவர் நெல்லையில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தனது மகன் தனுஷ் மருமகள் அக்சயா இருவரும் சேர்ந்து சந்தோஷமாக வாழ்ந்து வரும் நிலையில் அவர்கள் குறித்து இணையத்தில் அவதூறாக தவறான தகவல்கள் பரப்புவோர் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





