நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடந்த சில ஆண்டுகளாக படங்களில் மிக மும்மரமாக நடித்து வருகிறார். துவக்கத்தில், நடிக்க வந்த புதிதில் ரஜினிகாந்த் சின்ன சின்ன கேரக்டர்கள் நடித்த பிறகு, 16 வயதினிலே படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில், ஒரு மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
அந்த படத்தை தொடர்ந்து மூன்று முடிச்சு, புவனா ஒரு கேள்விக்குறி, பைரவி, ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல் போன்ற படங்கள் அவருக்கு ஒரு நல்ல கதாநாயகன் அந்தஸ்தை கொடுத்தது. தொடர்ந்து மனிதன், மாவீரன், வேலைக்காரன், குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன் போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகராக உருவானார்.
அண்ணாமலை, பாட்ஷா, முத்து, படையப்பா, சிவாஜி, பாபா, எந்திரன், அண்ணாத்த, காலா, கபாலி, தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்து இப்போது ரஜினி உச்சத்தில் இருக்கிறார். இப்போது ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் இப்போது நடித்து வரும் படம் 170வது படம் வேட்டையன். அதைத்தொடர்ந்து 171-வது படம் லோகேஷ் கனகராஜ் இயக்கம் படம். இந்த படத்தின் பெயர் ஈகிள் அல்லது கழுகு என்று கூறப்படுகிறது. இந்த படங்களைதொடர்ந்து ரஜினி நடிக்கும் 172 வது படத்தை வேல்ஸ் நிறுவன தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்தப் படத்தின் இயக்குனர் யார் என்று இன்னும் முடிவாகவில்லை.
முன்னணி தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிப்பதாக, 15 நாட்களுக்கு முன்பே ஐசரி கணேஷ், ரஜினிகாந்தை நேரடியாக சந்தித்து நிறைய விஷயங்களை பேசி உள்ளார். ரஜினியும் மனப்பூர்வ சம்மதத்தை தெரிவித்துவிட்டார். இதையடுத்து தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவும் ரஜினிகாந்த் முடிவு செய்து இருக்கிறார். வாரிசு படத்தை தயாரித்த தில்ராஜூ தயாரிப்பிலும், ஒரு படத்தில் ரஜினி நடிப்பார் என்று கூறப்படுகிறது.
ரஜினி அடுத்தடுத்த படங்களில் நடிக்க வேகமாக கமிட் ஆகி வருவது மத்தியில் சந்தோஷம் தந்தாலும், ஒரு விதத்தில் ரசிகர்களுக்கு இது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ரஜினிக்கு இப்போது 73 வயதாகிறது. இந்த வயதில் தனது உடல் நலத்தை கவனித்துக் கொள்ளாமல் தொடர்ந்து படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொள்வது சரிதானா என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர். குடும்பத்தில் ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்து பிரச்னை ஓடிக்கொண்டிருப்பதால், வீட்டில் இருக்கவே பிடிக்காமல்தான் ரஜினிகாந்த் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வருகிறார் என்ற தகவலும் வேகமாக பரவி வருகிறது.





