கேப்டன் மில்லர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இதில் அவரது ஐம்பதாவது திரைப்படமாக ராயன் உருவாகி இருக்கிறது. படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் அவர் இயக்கவும் செய்திருக்கிறார். மிகப்பெரும் எதிர்பார்ப்பை இந்த திரைப்படம் ஏற்படுத்தி உள்ளது.
இதில், செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ், சந்திப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, சரவணன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் வடசென்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தில் தனுஷிற்கு சகோதரியாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார்.
ஏ ஆர் ரகுமான் இசையில் அடுத்த மாதம் இந்த திரைப்படத்தில் இருந்து முதல் பாடல் வெளியாகிறது. அனேகமாக ஜூலை மாதம் ராயன் திரைப்படம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து கிடைத்த இரண்டு மாத இடைவேளையில், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் தனுஷ். இளைஞர்களின் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
படத்தின் மொத்தம் நான்கு பாடல்கள் இருப்பதாகவும், நான்குமே நன்றாக வந்துள்ளது என்றும் இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவித்திருந்தார். இந்த இரண்டு திரைப்படங்களை தொடர்ந்து தனுஷ் தற்போது, குபேரா படத்தின் கவனம் செலுத்தி வருகிறார். தெலுங்கின் பிரபல இயக்குனரான சேகர் கமுலாதான் இதன் இயக்குனர்.
நடிகர் தனுஷ் வாத்தி திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கில் நேரடியாக நடிக்கும் இரண்டாவது திரைப்படம் தான் இது. இதன் முதல் போஸ்டரே ரசிகர்கள் மத்தியில், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதற்குக் காரணம் தனுஷின் கெட்டப் தான். பிச்சைக்காரன் கெட்டப்பில் அவர் காட்சியளித்தார். இருப்பினும் படத்தில் தனுஷ் கோடீஸ்வரர் என்றும், இது சஸ்பென்ஸ் திரில்லராக உருவாவதாகவும் சினிமா விமர்சகர்கள் கூறியிருந்தனர்.
இந்த திரைப்படத்தில் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா இடம்பெற்றுள்ளார். மும்பையை சுற்றியே இந்த திரைப்படம் நகர்வதாக கூறப்பட்ட நிலையில், அங்கு இதுவரை சூட்டிங் நடத்தப்படாதது குறித்து பலரும் பேசி வந்தனர். இந்த நிலையில் அதற்கு படக்குழு தற்போது விடை அளித்து உள்ளது. மாஸாக அங்கு படப்பிடிப்பை தொடங்கி இருப்பதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. போஸ்டரில் தனுஷ் பின்பக்கம் நின்று கொண்டிருந்தவர் புகைப்படம் இருக்கிறது.





