2024 ஆம் ஆண்டில் பொருத்தவரை தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களாக பெரிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகாததால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த சமயத்தில் வெளியான மலையாள திரைப்படங்களுக்கு அவர்கள் முக்கியத்துவமும் கொடுக்க ஆரம்பித்தனர்.
இப்படியான சூழலில், சமீபத்தில் வெளியான அரண்மனை படத்தின் நான்காம் பாகத்திற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த திரைப்படத்தில் அவ்வளவு பெரிய மாற்றத்தை எதுவும் சுந்தர் சி செய்யவில்லை. இருப்பினும் படத்திற்கு குடும்பம் குடும்பமாக திரையரங்கிற்கு சென்று வருகின்றனர்.
ஒரு பெரிய அளவில் உறுத்தல் இல்லாத திரைக்கதை, ஆங்காங்கே சிரிக்க வைக்கும் நகைச்சுவை காட்சிகள் என பல விஷயங்கள் இதில் இருப்பதால் அரண்மனை 4 திரைப்படத்திற்கு ரசிகர்கள் பச்சைக்கொடி காட்டி இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தொடர்ந்து வரும் பத்தாம் தேதி கவினின் ஸ்டார் திரைப்படம் வெளியாகிறது.
இதன் ட்ரெய்லர் பெரிய அளவில் பேசப்பட்டதால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் அடுத்த மாதம் தனுஷின் ராயன் திரைப்படம் வெளியாகிறது. அனேகமாக ஜூன் 13ஆம் தேதி படம் ரிலீஸ் செய்யப்படும் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை தனுஷை இயக்கியிருக்கிறார்.
வடசென்னையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் தனுஷ் மொட்டை கெட்டப்பில் நடித்திருக்கிறார். ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். படத்தில் முக்கியமான நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கிறார்கள். தனுஷே இயக்கியிருப்பதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் சீயான் விக்ரமின் தங்கலான் திரைப்படமும் அடுத்த மாதம் 13ஆம் தேதியே வெளியாகலாம் என்று தகவல் கசிந்துள்ளது. பா ரஞ்சித் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இதன் டீசர் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இதன் திரைக்கதையை இயக்குனர் எழுதி இருக்கிறார். இப்படி ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்களும் வெளியாக இருப்பதால், ஜூன் மாதம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக இருக்கப் போகிறது.





