நடிகர் அஜித்குமார் இப்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய இந்த படப்பிடிப்பு, அஜர்பைஜானில் சில மாதங்கள் தொடர்ந்து நடந்தது. அங்கு அடிக்கடி ஏற்பட்ட கனமழை, மணல் புயல், கடும்குளிர், சூறாவளிக்காற்று உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு அடிக்கடி தடைபட்டது. இடையே கலை இயக்குனர் மிலன் திடீமறைவும் படப்பிடிப்பு குழுவுக்கு மிகப்பெரிய பின்னடைவை தந்தது. எனினும், விடாமுயற்சி தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனிக்கும், படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவுக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஒரு கட்டத்தில் அந்த படத்தில் இருந்து நீரஷ் ஷா அதிரடியாக விலகிவிட்டார். அவர் அஜித்குமாரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர், அவரது நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நீரவ் ஷாவுக்கு பதிலாக அவரது இடத்தில் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் நியமனம் செய்யப்பட்டு, அவரது ஒளிப்பதிவில் படப்பிடிப்பு நடந்து வந்தது. ஒரு கட்டத்தில் படப்பிடிப்புகளை நடத்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்சன்ஸ், போதிய நிதியாதாரம் இல்லாமல் தடுமாற்றம் அடைந்தது. இந்தியன் 2 இந்தியன் 3 வேட்டையன், விடாமுயற்சி போன்ற 4 பெரிய பட்ஜெட் படங்களை ஒரே நேரத்தில் தயாரித்ததால், லைகா தயாரிப்பு நிறுவனத்துக்கு மிகப்பெரிய நெருக்கடிகள் ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், லைகா நிறுவனம் முடிவு செய்தது. இதையடுத்து கடந்த இரண்டு மாதங்களாக, விடாமுயற்சி படபிடிப்பு நடக்கவில்லை. தற்போது மீண்டும் படப்பிடிப்பை துவங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் லைகா நிறுவனம் செய்துள்ளது. படத்தின் நாயகன் அஜித் ஓகே சொன்னால் படப்பிடிப்பை துவங்கி விடலாம் என்ற நிலையில், அஜித்குமார் இன்னும் ஓகே சொல்லாமல் மவுனமாக இருந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
இதற்கு காரணம், விடாமுயற்சி படத்தில் நடிக்க நடிகர் அஜித்குமார் சம்பளம் 163 கோடி என்று சொல்லப்படுகிறது. இதில் குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் அஜித்குமார் வங்கி கணக்கில், படத்தயாரிப்பு நிறுவனம் சேர்க்க வேண்டும் என்பது விதிமுறை. ஏனெனில், மொத்தமாக பெரிய தொகையை தருவது படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு சிரமம் என்பதால், இதுபோல் மாதந்தோறும் பிரித்து வாங்கிக் கொள்வது அஜித்குமாரின் வழக்கம். இந்த நடைமுறையை இப்போது டைரக்டர் ஷங்கரும் பின்பற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் லைக்கா நிறுவனம் இந்த படத்துக்காக மாதமாதம் அஜித் குமாரும் வழங்க வேண்டிய குறிப்பட்ட தொகையை, தராமல் இழுத்தடிப்பதாக தெரியவந்துள்ளது. எனவே தனது சம்பளம் நிறைய பாக்கி இருப்பதால், 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இன்னும் பத்து சதவீதமே படப்பிடிப்பு உள்ளதால் இன்னும் தனக்கான சம்பளத்தை வங்கி கணக்கி்ல் சேர்க்காததால் லைகா நிறுவனத்தை கண்டு கொள்ளாமல், அஜித்குமார் விடாமுயற்சி படப்பிடிப்பை தாமதிப்பதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





