நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த கலைஞராக தன்னை வெளிப்படுத்தியவர். நடிக்க வந்த துவக்கத்தில் வில்லனாக ரசிகர்களை மிரட்டிய அவர், ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும் மாறி ரசிகர்களின் மனம் கவர்ந்தார். இப்போது அப்பா கேரக்டரில் குணச்சித்திர நடிப்பில் வெளுத்து வாங்கி வருகிறார்.
நடிகர் சத்யராஜ், ஆரம்பத்தில் கடவுள் பக்தி கொண்டவராக இருந்தவர். ஆனால் இயக்குனர் மணிவண்ணன் படங்களில் நடித்த போது, இருவரும் நெருங்கிய நண்பர்களாகினர். ஒரு கட்டத்தில் பகுத்தறிவாதி மணிவண்ணனை தனது மானசீக குருவாக ஏற்றுக்கொண்ட சத்யராஜூம் தீவிரமான பகுத்தறிவு பாதைக்கு மாறினார். பெரியாரின் தீவிர விசுவாசியாக உருவானார்.
அதன்பிறகு தொடர்ந்து மேடைகளில் பெரியாரின் புரட்சிக்கர கருத்துகளை பேசி வரும் சத்யராஜ் மதம் சார்ந்த, மூடநம்பிக்கை சார்ந்த விஷயங்களை கடுமையாக எதிர்த்து பேசி வருகிறார். அதனால் அவருக்கு புரட்சித்தமிழன் என்ற பட்டப் பெயரும் உண்டு. தவிர, பெரியார் என்ற படத்தில் பெரியார் கேரக்டரிலும் சத்யராஜ் நடித்திருந்தார்.
சமீபகாலமாக ஹீரோயின்களுக்கு அப்பா கேரக்டரில் அதிகமாக நடித்து வரும் சத்யராஜ், லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் உள்ளது. ஆனால் நீண்ட நாட்களாக ரஜினியுடன் நடிக்காமல் இருக்கும் சத்யராஜ், கேரக்டர் பிடித்திருந்தால் நிச்சயமாக நடிப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், இரு தினங்களாக பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட உள்ளதாகவும், இதில் மோடி கேரக்டரில் நடிகர் சத்யராஜ் நடிக்க இருப்பதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. இந்த தகவலை சத்யராஜின் மகள் திவ்யா தான் செய்தி தொடர்பாளர் ஒருவரிடம் கூறியிருப்பதாகவும் தகவல் பரவியுள்ளது. நாத்திகம் பேசும் சத்யராஜ், பாஜக பிரதமர் மோடி கேரக்டரில் நடிப்பது பெரிய விமர்சனமாக, சர்ச்சையாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நடிகர் சத்யராஜ் கூறியிருப்பதாவது, பிரதமர் மோடி வேடத்தில் நான் நடிப்பது, உங்கள் மூலமாக தான் எனக்கே தெரிய வருகிறது. இது எனக்கு புதிய செய்தியாக உள்ளது. ஆனால் நாத்திகம் பேசிய எம்ஆர் ராதா, பல படங்களில் ஆன்மிகவாதியாக நடித்துள்ளார். வாய்ப்பு வந்தால் பார்க்கலாம் என்று கூறியிருக்கிறார். அப்படி என்றால், மோடி கேரக்டரில் நடிக்க தனக்கு சம்மதம்தான் என்பதை சூசகமாக சத்யராஜ் கூறியிருப்பது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.





