உலக அளவில் புகழ் பெற்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளரான அவர் முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்றார். 90களில் உலகமயமாக்கல் விரிவடைந்தபோது சினிமாவுக்குள் வந்த அவர் அந்தக் காலகட்டத்துக்கு தகுந்தபடி இசையை கொடுத்தார். இதன் காரணமாக ஏ.ஆர்.ரஹ்மானி இசை முழுக்க முழுக்க புதிதாக இருந்தது.
இளையராஜாவின் கோட்டையாக இருந்த தமிழ் சினிமாவை தனது கோட்டையாகவும் மாற்றினார் ரஹ்மான். அந்த காலகட்டத்தில் அவர் இசையமைத்த அத்தனை படங்களின் பாடல்களும் மெகா ஹிட்டாகின. அதனைத் தொடர்ந்து பாலிவுட்டுக்கும் சென்ற அவர் அங்கும் தனது இசை சாம்ராஜ்ஜியத்தை பெருக்கி ஹாலிவுட்டுக்கும் சென்றார். ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் அவர் பெற்றார்.
அவரது இசையமைப்பில் தமிழில் கடைசியாக மாமன்னன் படம் வெளியானது. அடுத்ததாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் லால் சலாம் படம் வெளியாகவுள்ளது. திரைப்படங்களில் மட்டுமின்றி இசை கச்சேரி நடத்துவதிலும் ஏ.ஆர்.ரஹ்மான் அதிக கவனம் செலுத்திவருகிறார். உலகின் பல்வேறு நாடுகளுக்கு தனது குழுவுடன் சென்று நடத்தப்படும் அவரது இசை கச்சேரிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துவருகிறது.
அந்தவகையில் சினிமாவில் 30 வருடங்களை ஏ.ஆர்.ரஹ்மான் நிறைவு செய்ததையொட்டி சென்னையில் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் கான்செர்ட் ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தார். அதன்படி கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி இந்த கான்செர்ட் நடப்பதாக இருந்தது. ஆனால் அன்றைய தினம் பெய்த மழையின் காரணமாக செப்டம்பர் 10ஆம் தேதி இந்நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது.
இதனையடுத்து அறிவித்தபடி நேற்று சென்னை பனையூரில் மறக்குமா நெஞ்சம் இசை கச்சேரி நடந்தது. ஏற்கனவே ஆகஸ்ட் 12ஆம் தேதி நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கியவர்கள் இதற்கும் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்று நடந்த இந்த நிகழ்ச்சியில் 25,000 பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் 50,000 பேர் கலந்துகொண்டனர்.
அளவுக்கு அதிகமாக கூட்டம் வந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் பார்க்கிங் வசதி, தண்ணீர் வசதி என அடிப்படை வசதி எதையுமே செய்யவில்லை என்று ரசிகர்கள் குற்றஞ்சாட்டினர். அதுமட்டுமின்றி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அளவுக்கு அதிகமாக புதிய டிக்கெட்டுகளை விற்றதால் ஏற்கனவே டிக்கெட் வாங்கியவர்கள் நிகழ்ச்சி நடந்த மைதானத்துக்குள்ளேயே செல்ல முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.
சூழல் இப்படி இருக்க நிகழ்ச்சி ஏற்பாடு சொதப்பியதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மன்னிப்பு கோரியுள்ளனர். ஆனால் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியும் நிகழ்ச்சியை ஒழுங்காக பார்க்க முடியவில்லை. எனவே டிக்கெட் பணத்தை திருப்பி தர வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.





