நடிகர் அஜித்குமார் கடந்த அக்டோபர் மாதம் முதல் விடாமுயற்சி திரைப்படத்தில் பிஸியாக இருந்தார். அஜர்பைஜான் நாட்டில் இதன் சூட்டிங் நடத்தப்பட்ட நிலையில், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோரும் இதில் நடித்தனர். மகிழ் திருமேனி இயக்கத்தில் இதன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.
கிட்டத்தட்ட 70 விழுக்காடு பணிகள் முடிவடைந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னும் நடத்தப்படாமலேயே இருக்கிறது. இதற்காக பல காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. தயாரிப்பாளருக்கும் அஜித்திற்கும் பிரச்சனை என்றும், படத்திற்கு போதிய பட்ஜெட் இல்லாததால் முடங்கி இருப்பதாகவும் சிலர் கூறுகிறார்கள்.
இதன் நடுவே அஜித் குமார் தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அவரின் 63 வது திரைப்படமாக உருவாகும் இதனை, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். படத்திற்கு குட் பேட் அக்லி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். தெலுங்கின் முன்னணி நிறுவனமான மைத்திரி மூவிஸ் இதனை தயாரிக்கிறது
இதற்கான சூட்டிங் கடந்த வாரம் ஆரம்பித்தது. ஹைதராபாத்தில் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தில் அஜித் மூன்று கெட்டப்புகளில் நடிப்பதாக சொல்கிறார்கள். இதனையே, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் காட்டியது. அதில் அஜித்தின் கெட்டப்பே பலரும் பேசும் வகையில் அமைந்தது.
இந்த நிலையில் இந்த இரண்டு படங்களுக்கு பிறகு, அஜித் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது அதற்கு வாய்ப்பே இல்லை என்று சினிமா விமர்சகர்கள் சிலர் கூறி வருகின்றனர். விடுதலை 2, வாடிவாசல் என அடுத்தடுத்த படங்களில் அவர் பிஸியாக இருப்பதால் அஜித்துடன் இணைய வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கிறார்கள். இந்த சமயத்தில், மோகன் ராஜா அஜித்திடம் ஒரு கதை கூறியிருக்கிறாராம்.
அதுவும் அஜித்திற்கு மிகவும் பிடித்துப் போனதாக தெரிகிறது. மிகப்பெரும் பொருட்செலவில் இந்த திரைப்படத்தை எடுக்க மோகன் ராஜா திட்டமிட்டுள்ளாராம். இதற்காக தயாரிப்பாளரிடம் அவர் ஒப்பந்தம் வாங்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதன்பிறகு சிறுத்தை சிவாவின் கதையிலும் அஜித் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





