இந்த வருடத்தில் தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்களில் மிக முக்கியமான படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அயலான் மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்கள் வெளியாகியிருந்தன. இதேபோல் பிப்ரவரி மாதம் ரஜினிகாந்த் நடிப்பில் லால் சலாம் படம் வெளியாகி தோல்வி அடைந்தது.
இதன் பிறகு பெரிய படங்கள் என்று எதுவும் வெளியாகவில்லை. அண்மையில் விஷால் ஹரி கூட்டணியில் எடுக்கப்பட்ட ரத்னம் படம் படுதோல்வியை சந்தித்தது. 2024 ஆம் ஆண்டின் முற்பாதி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அந்த அளவு மிகப்பெரிய விருந்தை கொடுக்கவில்லை என்றே கூறலாம். ஆனால் வரும் நாட்கள் அப்படி இருக்காது என்று சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் முக்கியமான திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பதே இதற்குக் காரணம். சொல்லப்போனால் அடுத்த மாதம், தனுஷின் ஐம்பதாவது திரைப்படமான ராயன் வெளியாகிறது. இந்த படத்தை தனுசே இயக்கி நடித்து இருப்பதும், ஏராளமான நட்சத்திரங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளதும் அதன் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
இதேபோல் ஜூலை மாதம் தங்கலான் படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. பா ரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் விக்ரம் மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருக்கிறார். இதன் டீசரே சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. உண்மை சம்பவத்தை தழுவி இந்த திரைப்படத்தை மிக பிரம்மாண்டமாக பா ரஞ்சித் எடுத்திருக்கிறார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க செய்து இருக்கிறது.
ஜூலை மாதம் மற்றொரு முக்கிய திரைப்படமான இந்தியன் 2வும் ரிலீசாகிறது. முந்தைய பாகத்தின் தொடர்ச்சியாக இந்த திரைப்படம் வெளியாவதால் சங்கர் எந்த மாதிரியான கதை அமைப்பை வைத்திருப்பார் என்று பலரும் ஆர்வத்தில் உள்ளனர். இதே போல் செப்டம்பர் 5ஆம் தேதி விஜயின் கோட் திரைப்படமும், அக்டோபர் மாதம் ரஜினிகாந்தின் வேட்டையன் படமும் வெளியாகிறது.
இந்த வரிசையில் தற்போது சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் இணைந்து இருக்கிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரித்துள்ளார். ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இது உருவாகி இருக்கிறது. செப்டம்பர் மாத இறுதியில் இந்த திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.





