தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இசை சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தி, அதில் கடந்த 47 ஆண்டுகளாக இசைஞானி என்ற பட்டத்துடன் வலம் வருபவர் இளையராஜா. அன்னக்கிளி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அவர், இயக்குனர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை அவர் இசையமைத்த 1000வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக இளையராஜா அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதும், கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாவதும் தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக நான் இசையமைத்த பாடல்கள் எனக்கு மட்டுமே சொந்தம் என்ற அவரது பிடிவாதம், பலரையும் முகம் சுளிக்க வைக்கிறது.
பாடகர், கவிஞர், இசையமைப்பாளர் என மூவரும் ஒன்று சேர்ந்துதான் ஒரு பாடல் உருவாகிறது. இதில் இசையமைப்பாளர் மட்டுமே தனது பாடல் என்று சொந்தம் கொண்டாடுவது நியாயமே இல்லை. அதுவும் தவிர அந்த பாடலை படத்தின் தயாரிப்பாளருக்கு சம்பளம் வாங்கிக்கொண்டு விற்று விட்ட பிறகு, எப்படி இசையமைப்பாளருக்கு சொந்தமாகும் என்றும் கேள்வி கேட்டு வருகின்றனர்.
இளையராஜா, என் பாடல்கள் எனக்கே சொந்தம் என்ற வழக்கு, கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையே கூலி படத்தின் டீசரில் என் பாடலை பயன்படுத்தியதற்கு விளக்கம் தேவை என சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா, குணா படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு பாடலை பயன்படுத்தியதற்காக மஞ்சும்மெல் பாய்ஸ் படத் தயாரிப்பாளருக்கு ரூ. 1 கோடி கேட்டும் நோட்டீஸ் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் சந்தோஷமான ஒரு தகவலும் இப்போது வெளிவந்துள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியான படம் விடுதலை. சூரி முதன் முறையாக கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற வழிநெடுக காட்டுமல்லி பாடலை, படம் வெளியான சமயத்தில் முணுமுணுக்காத உதடுகளே இல்லை என்றும் சொல்லலாம்.
இப்போது விடுதலை 2 படத்திற்கும் இளையராஜா இசை அமைத்துள்ளார். படத்தில் இடம்பெற்ற 4 பாடல்களும், வழிநெடுக காட்டுமல்லி பாடல் போலவே, வேற லெவலில் தரமான பாடல்களாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. கடந்தாண்டு வெளியான விடுதலை படத்தின் ஆடியோ ரைட்ஸ் ரூ. 1.5 கோடி விற்ற நிலையில், இப்போது விடுதலை 2 படத்தின் ஆடியோ ரைட்ஸை சோனி நிறுவனம், ரூ. 4 கோடி விலை கொடுத்து வாங்கியுள்ளது. மீண்டும் நான்தான் இசையில் கிங்கு என்று விடுதலை 2 படத்தில் இசைஞானி இளையராஜா நிரூபித்திருக்கிறார்ர் என்ற தகவல் வைரலாகி வருகிறது.





