இயக்குனர் சிறுத்தை சிவா, நடிகர் கார்த்தி நடித்த சிறுத்தை படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல்படமே மிகப்பெரிய வெற்றியை அவருக்கு கொடுத்தது. அன்று முதல் சிறுத்தை சிவா என அவர் அழைக்கப்படுகிறார். வீரம், விஸ்வாசம், விவேகம் என அஜீத்குமார் நடித்த மாஸ் ஹிட் படங்களை கொடுத்தார். ரஜினி நடித்த அண்ணாத்த படத்தையும் இயக்கினார்.
தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் வருகிற நவம்பர் 14ம் தேதி கங்குவா படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் இரண்டு கேரக்டர்களில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக திஷா பதானி, வில்லன் கேரக்டரில் பாபி தியோல் நடித்திருக்கின்றனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஸ்டுடியோ ஸ்கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா, யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் சார்பில் பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளனர்.
சரித்திர கால சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. 2 பாகமாக வெளியாகும் இந்த படத்தின் முதல் பாகம் வருகிற நவம்பர் 14ம் தேதி ரிலீஸாகிறது. இதில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். 2ம் பாகத்தில் வில்லன் கேரக்டரில் கார்த்தி நடித்திருப்பதாக கூறப்படுகிறது. முதல் பாகத்தை தொடர்ந்து 2ம் பாகம் அடுத்த ஆண்டில் வெளியாகலாம்.
கங்குவா படத்தின் பிரமோஷன் பணிகளில் படக்குழு தொடர்ந்து கலந்துக்கொண்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா சமீபத்தில் இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது சூர்யா பேசியதாவது, மக்கள் கொடுக்கிற இந்த அளவு கடந்த அன்புக்கு நான் என்ன திருப்பி தரப் போகிறேன் என்று தெரியவில்லை. என்னால் முடிந்த அளவுக்கு என்னோட உழைப்பை கொடுப்பேன்.
இந்த 49 வயதிலேயும் கங்குவா படத்தில் சிக்ஸ் பேக் வைத்து நடித்திருக்கிறேன். நான் முன்னாடி சொன்ன மாதிரிதான். கங்குவா படம் ஒரு குழந்தை. அது கண்டிப்பா மக்களுக்கு பிடிக்கும். மற்ற மொழிகளில் வந்த சூப்பர் ஹிட் படங்களை போலவே, கங்குவா படமும் இருக்கும். தெலுங்கில் பாகுபலி, ஆர் ஆர் ஆர், இந்தியில் கல்கி படங்கள் இருக்கின்றன. அது போல தமிழுக்கு கங்குவா படம் ஒரு அடையாளமாக அமையும்.
கங்குவா படத்தில் இருக்கிற ஒரு உலகத்தை இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் கொண்டு வரவில்லை. இந்த படம் கண்டிப்பாக ஒரு முன் உதாரணமாகவும் ஒரு கல்ட் கிளாசிக் படமாகவும் அமையும் என்று சூர்யா பேசியிருக்கிறார். கங்குவா வரும் நவம்பர் 14ம் தேதி ரிலீஸாகிறது. முன்னதாக வருகிற 26ம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் கங்குவா படத்தில் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.





