தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன் திறமையை வெளிப்படுத்தியவர் விஜய் ஆண்டனி. நான் அவன் இல்லை, வேட்டைக்காரன், அங்காடித் தெரு, டிஸ்யூம் போன்ற பல படங்களுக்கு இசையமைத்தவர் விஜய் ஆண்டனிதான். அவரது இசையில் பாடல்கள் எல்லாமே வேற லெவலில்தான் இருக்கும். நல்ல இசையமைப்பாளராக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
அதன்பிறகு திடீரென, நான் என்ற படத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார். பிறகு இந்தியா பாகிஸ்தான், திமிரு புடிச்சவன், சலீம், கொலைகாரன், கோடியில் ஒருவன், பிச்சைக்காரன், பிச்சைக்காரன் 2, ரத்தம், சைத்தான், அண்ணாதுரை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அவரது நடிப்பில் ரோமியோ படம் வெளிவந்தது.
விஜய் ஆண்டனி நடித்த படங்களில், அவரது அற்புதமான நடிப்பு திறமை வெளிப்பட்டுள்ளது. குறிப்பாக நான், பிச்சைக்காரன், திமிரு புடிச்சவன் போன்ற படங்களில் தனது கேரக்டரை மிக சிறப்பாக வெளிப்படுத்தி நடித்திருந்தார். இந்தியா பாகிஸ்தான் படத்தில், காமெடி நடிப்பிலும் தனி முத்திரை பதித்திருந்தார். ஆனால் அவரே இயக்கிய தயாரித்த பிச்சைக்காரன் 2 படம் எதிர்பார்த்த அளவில் போகவில்லை. படம், பிளாப் ஆனது.
இதற்கிடையே அவரது வீட்டில் மிக சோகமான சம்பவம் நிகழ்ந்து, அவர் மிகவும் மனம் உடைந்து போனார். அவரது மூத்த மகள் மீரா, திடீரென தற்கொலை செய்துக் கொண்டது, தமிழ் சினிமாவினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த கொடிய துயரத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் விஜய் ஆண்டனி, படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான படம் ரோமியோ. இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. இந்த படம் குறித்து மிக கடுமையாக விமர்சித்து இருந்தார், சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன். அவருக்கு பதிலடி தரும் விதமாக பேசிய விஜய் ஆண்டனி, ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க என்று கூறியது வைரலானது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த விஜய் ஆண்டனியிடம், ப்ளு சட்டை மாறனின் விமர்சனம் குறித்து கேட்ட போது, பாவம், ப்ளு சட்டை மாறன், நல்ல மனுஷன். அவர் வேலையை அவர் செய்கிறார். என் வேலையை நான் செய்கிறேன். அவர் நல்ல விதமாக பேசினால் யூடியூப் பார்ப்பீங்களா, அவர் அப்படி பேசினால்தானே, வியூவ்ஸ் அதிகமாக வருது, என்று கலாய்த்து பதில் அளித்திருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.





