நடிகர் விஜய் இப்போது தனது கடைசி படத்தில் நடித்து வருகிறார். தளபதி 69 என தற்காலிக பெயர் வைக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. அதன்பின்பு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக, விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை நேரடியாக சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
நடிகர் விஜய், சங்கீதா தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இதில் மகன் ஜேசன் சஞ்சய், தாத்த எஸ்ஏ சந்திரசேகர் போல சினிமா இயக்குனராகி உள்ளார். லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் அவர் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார். இவர் ராயன் படத்தில் தனுஷின் தம்பியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு சென்றாலும் அவரது மகன் ஜேசன் சஞ்சய் சினிமா இயக்குனராக மாறியிருப்பது ஒருவிதத்தில் தளபதி ரசிகர்களுக்கு சந்தோஷத்தை தந்துள்ளது. ஆனால் அப்பாவை போல நடிகராகாமல், தாத்தாவை போல இயக்குனராகி விட்டாரே என்றும் சிலர் கூறுகின்றனர்.
இதற்கிடையே லைகா புரடக்சன்ஸ் சார்பில் படத்தை இயக்க ஒப்பந்தமான நிலையில், பல மாதங்களாக படப்பிடிப்பை துவங்கவோ அதற்கான முன்கட்ட பணிகளை ஆரம்பிக்கவோ லைகா நிறுவனம் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஜேசன் சஞ்சய் மிகவும் மன உளைச்சலில் தவித்தார்.
இந்த தயாரிப்பு நிறுவனத்தை விட்டு விலகி விடலாம். வேறு ஏதேனும் ஒரு தயாரிப்பு நிறுவனத்திடம் முயற்சிக்கலாம் என்ற முடிவுக்கும் வந்திருக்கிறார். அப்போது தனது மேனேஜராக உள்ள சுரேஷ் சந்திராவிடம் இதுகுறித்து போனில் பேசியிருக்கிறார். அப்போது நடிகர் அஜீத்குமார் அருகில் இருந்த நிலையில், சுரேஷ் சந்திரா விஜய் மகனிடம் பேசியிருக்கிறார். அஜீத்குமாரின் மேனேஜர்தான் சுரேஷ் சந்திராதான்.
அப்போது அருகில் இருந்த அஜீத்குமார் விஷயம் அறிந்து போனை வாங்கி, ஜேசன் சஞ்சயிடம் பேசி வாழ்த்துகள் சொல்லி இருக்கிறார். மேலும், இந்த நிறுவனத்தில் இருந்து நீ விலக விரும்பினால், தாராளமாக வெளியே வந்து விடு. உனக்கு நான் பெரிய தயாரிப்பு நிறுவனங்களை அறிமுகப்படுத்துகிறேன். விரும்பும் நிறுவனத்துக்கு நீ படம் செயயலாம் என்று கூறி தானாக உதவ அஜீத்குமாரே முன்வந்திருக்கிறார். ஆனால் சில மாதங்களில் லைகா நிறுவனமே ஜேசன் சஞ்சய் படத்தை இயக்க தயாராகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.





