நடிகர் சரத்குமார், கடந்த 1990களில் முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தந்தவர். சேரன் பாண்டியன், சூரியன், நாட்டாமை, சூரியவம்சம். நட்புக்காக போன்ற பல படங்களில் சரத்குமார் நடிப்பு, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சூரிய வம்சம் படத்தில் நடித்த பிறகு, நடிகை ராதிகாவை, காதல் திருமணம் செய்துக்கொண்டார்.
இப்போதும் பொன்னியின் செல்வன், போர்த்தொழில் போன்ற படங்களில் செலக்டிவ் ஆன கேரக்டர்களில் சரத்குமார் நடித்து வருகிறார். கடந்த 1996ம் ஆண்டில் சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியை துவங்கிய சரத்குமார், அரசியலில் முக்கிய இடத்தை இதுவரை பிடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார்.
அதனால், சட்டசபை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நேரங்களில் மட்டுமே அரசியல் பணிகளில் ஆர்வம் காட்டுவார். கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை நடத்துவார். ஏதேனும் ஒரு கட்சிக்கு ஆதரவு காட்சி தேர்தல் பிரசாரம் செய்வார், ஆனால் தேர்தல் முடிந்த பிறகு, காரில் உள்ள கட்சிக் கொடியை கழட்டி விட்டு, சினிமாவில் ஆர்வம் காட்ட துவங்குவார்.
அப்படிதான் இதுவரை சரத்குமாரின் அரசியல் பயணம் இருந்து வருகிறது. ஆனால் இந்த முறை புதிய முயற்சியாக, நடந்துமுடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில், விருதுநகர் தொகுதியில் பாஜகவின் ஆதரவு பெற்ற சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளராக நடிகை ராதிகாவை போட்டியிடச் செய்தார். அவருக்கு எதிராக வேட்பாளராக நின்றது கேப்டன் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. அதனால் நாடு முழுவதும் பாஜக கூட்டணியா, காங்கிரஸ் கூட்டணியா யாருக்கு அதிக வாய்ப்பு என்ற பரபரப்பில் நாடே இருந்து வருகிறது. முதன்முறையாக மனைவி ராதிகாவை அரசியல் களத்தில் இறக்கி விட்டுள்ள சரத்குமாரும், எப்படியாவது மோடி ஆட்சி மீண்டும் வர வேண்டும், தனது மனைவி ராதிகா எம்பி ஆக வேண்டும் என்ற ஆசையில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், இன்று விருதுநகரில் உள்ள பிரசித்தி பெற்ற பராசக்தி மாரியம்மன் கோவிலுக்கு சரத்குமாரும், ராதிகாவும் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது ராதிகா எம்பி ஆக வேண்டும், பாஜக மீண்டும் வெற்றி பெற்று மோடி பிரதமராக வேண்டும் என்று வேண்டுதலை வலியுறுது்தி கோவில் பிரகாரத்தை சுற்றி, அங்க பிரதட்சணம் செய்து சுவாமியை வழிபட்டார். அந்த புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.





