நடிகர் விஜய், இப்போது இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் ( கோட்) படத்தில் நடித்து முடித்திருக்கிறார். விஜய் அப்பா, மகன் என்ற 2 வேடங்களில் நடித்துள்ள இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி, விநாயகர் சதுர்த்தி பண்டிகை காலத்தில் ரிலீஸ் ஆகிறது. அதற்கு முன்பாக, வருகிற 22ம் தேதி, விஜய் பிறந்த நாளன்று, செகன்ட்ஸ் சிங்கிள் பாடல் ரிலீஸாகிறது.
இந்த படத்துக்கு பிறகு தனது 69வது படத்தில் நடிக்கும் விஜய், இந்த படத்தை இயக்கும் வாய்ப்பை வலிமை, துணிவு படங்களை இயக்கி எச் வினோத்துக்கு தந்துள்ளது. ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்த்த நிலையில், அரசியல் பணிகள் காரணமாக, அக்டோபருக்கு படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளார் விஜய்.
நடிகர் விஜயை பொருத்தவரை ஒரு படத்தில் நடிக்க ரூ. 200 கோடி சம்பளம் வாங்கும் ஒரே தமிழ் நடிகர் விஜய்தான். இன்னும் ரஜினி, கமல், அஜீத்குமார் கூட 200 கோடி ரூபாய் சம்பளத்தை தொடவில்லை. ஆனால் இனி வரும் அடுத்தடுத்த படங்களில், தங்களது சம்பளத்தை ரூ. 200 கோடி வரை உயர்த்த அவர்கள் முடிவு செய்து விட்டனர். அதிலும் விஜய் அரசியலுக்கு போய் விட்டால், அந்த வாய்ப்புகளையும் இவர்களையே தேடி வர வாய்ப்புள்ளது.
இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே, மலையாள படங்கள் தமிழ்நாட்டில் சக்கைப்போடு போட்டு வெற்றி பெற்ற நிலையில் தமிழ் படங்கள் எதுவுமே பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அந்த சூழலில், 2004ம் ஆண்டில் ரிலீசாகி பெரிய வெற்றியைப் பெற்ற விஜய், திரிஷா நடித்த கில்லி படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டது. இது, ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று, 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்தது.
அதே நேரத்தில், அஜீத்குமார் நடித்த தீனா, மங்காத்தா, பில்லா உள்ளிட்ட சில படங்களும் இதே போல் ரி ரிலீஸ் செய்யபப்ட்ட நிலையில், அந்த படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. ஆனால் விஜய் படங்கள் ரி ரிலீஸ் செய்யப்பட்டால் ரசிகர்கள் அந்த படங்களை நல்ல முறையில் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையை கில்லி படம் தந்து விட்டது.
நடிகர் விஜய், வருகிற 22ம் தேதி தனது 50வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு, வருகிற 21ம் தேதி நடிகர் விஜய் நடித்த பகவதி படம் ரி ரிலீஸ் செய்யப்படுவதாக சில தினங்களுக்கு முன் ஒரு அறிவிப்பு வெளியானது. பிறகு விஜய் நடித்த போக்கிரி படமும் 21ம் தேதி ரி ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்பட்டது. இப்போது, அவர் நடித்த துப்பாக்கி படமும் அதே நாளில் ரி ரிலீஸ் ஆகிறது என்கின்றனர். இப்படி ஒரே நாளில் 3 சூப்பர் ஹிட் படங்கள் வந்தால், எதுவுமே பெரிய வசூலை பெறாது, கில்லிக்கு கிடைத்த வரவேற்பை கெடுப்பதாகவே இது அமையும் என்று விஜய் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.





