கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 100க்கும் மேற்பட்டவர்களில் 50 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இன்னும் 30க்கும் மேற்பட்டவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்தாண்டும் இதே போல் கள்ளச்சாராய உயிர்பலி நடந்த நிலையில், நடப்பாண்டிலும் அது தொடர்ந்திருப்பது, தமிழக மக்களிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் மற்றும் நடிகர் விஜய், நேற்று கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆறுதலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு ஆறுதல் கூறினார். நடிகராக மட்டுமின்றி அரசியல் தலைவராகவும் இருப்பதால், இதுபோன்ற விஷயங்களில் அவர் நேரில் வரவேண்டியது தவிர்க்க முடியாதது.
ஆனால் அதே நேரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பவர்களை பற்றி எல்லாம் யாரும் கவலைப்படக் கூடாது. அவர்கள் என்ன தேசத் தொண்டு செய்தா, உயிரிழந்தார்கள்? என்றும் சமூக வலைதளங்களில் ஒரு சிலர் பரபரப்பான விவாதத்தை முன்வைத்து விமர்சித்து வருகின்றனர். இதுபோன்றவர்களுக்கு அரசு தரப்பில் ரூ. 10 லட்சம் நிவாரணம் தருவது கூட தவறான அணுகுமுறை என்ற கருத்தும் வைரலாகி வருகிறது.
ஏனெனில், அரசு நிர்வாகமும், அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கும்தான் இதுபோன்ற கள்ளச்சாராய விற்பனை அதிகரிப்பும், ஒரு கட்டத்தில் அது விஷ சாராயமாக மாறி, குடிக்கும் பலரது உயிரை பறிப்பதற்கும் முக்கிய காரணமாகும். ஆக, கடமை தவறிய அதிகாரிகள் சம்பளத்தில் இருந்து, இத்தகைய நிவாரண தொகைகளை அரசு வழங்க வேண்டும். அப்பாவி மக்களின் வரிப்பணத்தை பறித்து,இதுபோன்ற நிவாரண தொகையை வழங்குவது தவறு என்றும் கூறி வருகின்றனர்.
ஏனெனில், உயிரிழந்த 50 பேரின், 50 குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் எனில், ரூ. 5 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை தான் அரசு தருகிறது, என்றும் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கிடையே நாளை விஜயின் 50வது நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், கள்ளக்குறிச்சி துயரச் சம்பவம் காரணமாக, என் பிறந்த நாளை பெரிய அளவில் கொண்டாட வேண்டாம் என, நடிகர் விஜயே அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும், கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று உதவுங்கள் என்றும் விஜய் கூறியிருக்கிறார். இது தவெக கட்சியின் மாவட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு ஒருவிதத்தில் மகிழ்ச்சியை தந்துள்ளது. ஏனெனில் இதுபோன்ற கொண்டாட்ட ஏற்பாடுகளுக்கு அவர்கள் தங்களது சொந்த பணத்தில் பல லட்சங்களை செலவழிக்க வேண்டிய நிலையில், கள்ளக்குறிச்சி சம்பவம், அந்த நெருக்கடியில் இருந்து காப்பாற்றி விட்டதாக கூறுவதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.





