தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஏ வெங்கடேஷ். இவர் சமீபகாலமாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக அசுரன் அங்காடி தெரு போன்ற படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். சில டிவி சீரியல்களிலும் ஏ வெங்கடேஷ் நடித்திருக்கிறார்.
இயக்குனர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் ரீமாசென் இணைந்து நடித்த படம் பகவதி. இந்த படம் கடந்த 2002ம் ஆண்டு வெளியானது. பகவதி படத்தில் டீக்கடை நடத்தும் நடிகர் விஜய்க்கு தம்பியாக அறிமுகமானவர் நடிகர் ஜெய். இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக மோனிகா நடித்திருந்தார். இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது.
அதன்பிறகு 5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சென்னை 28 என்ற படத்தில் ஹீரோவாக ஜெய் நடித்தார். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய இந்த படம் சூப்பர் ஹிட் படமாக பெரிய வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து இயக்குனர் சசிகுமார் இயக்கி நடித்த சுப்ரமணியபுரம் படத்தில் இரட்டை நாயகர்களில் ஒருவராக ஜெய் நடித்தார். இந்த படமும் அமோக வெற்றியை பெற்றது.
விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சுப்ரமணியபுரம் நடிகர் ஜெய்க்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. தொடர்ந்து எங்கேயும் எப்போதும் கோவா ராஜா ராணி கலகலப்பு 2 போன்ற ஹிட் படங்களில் நடிகர் ஜெய் நடித்தார். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே நடிகர் ஜெய்க்கு இசை மீது அதிக ஆர்வம் இருந்துள்ளது.
இதனால் பிரபல இசையமைப்பாளர் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவாவிடம் ஜெய் இசை கற்றுக் கொண்டுள்ளார். மேலும் வீரபாண்டியபுரம் பட்டாம்பூச்சி போன்ற படங்களுக்கு ஜெய் அவரே இசையமைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் ஜெய் கூறியதாவது, ஒரு படம் வெற்றி பெற்ற பிறகு அடுத்த ஒரு நல்ல கதைக்காக நீண்ட காலம் காத்திருப்பது மிகவும் தவறான முடிவு.
அந்த வகையில் நான் கொஞ்சம் ஏமாந்து விட்டேன். அந்த இடைவெளியில் நடிகர்கள் சிவகார்த்திகேயன் விஜய்சேதுபதி போன்ற புதிய ஹீரோக்கள் தமிழ் சினிமாவில் அதிகமாகி முன்னணி இடத்தை பிடித்து விட்டனர். சினிமாவில் சிறிய இடைவெளி விட்டால் கூட புதிய நடிகர்கள் அதிகமாக வருகின்றனர். இடைவெளி விடாமல் நடித்தாலும் சில படங்கள் வெற்றி பெறுவதில்லை. இதற்கான சரியான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை என்று நடிகர் ஜெய் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





