கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விடாமுயற்சி திரைப்படத்திற்கான சூட்டிங் தொடங்கியது. இயக்குனர் மகிழ்திருமேனி இதற்காக அஜர்பைஜான் நாட்டை தேர்வு செய்தார். மே மாதமே இதற்கான அறிவிப்பு வெளியானாலும், மிகவும் தாமதமாக சூட்டிங் தொடங்கியதாக அப்போதே ரசிகர்கள் கூறி வந்தனர்.
இந்த இடைப்பட்ட காலத்தில் தனது பைக்கை எடுத்துக் கொண்டு ஊர் ஊராக சுற்றி வந்தார் அஜித். ஒவ்வொரு ஊருக்கு செல்லும் போதெல்லாம் மறக்காமல் அவரது புகைப்படம் மட்டும் இணையத்தில் வைரலாகும். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் கொஞ்சம் படப்பிடிப்பிற்கும் வாங்க தல என்று அவரது ரசிகர்களையே இணையத்தில் புலம்பியதை அப்போது பார்க்க முடிந்தது.
இந்த நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்க அஜித் உடன் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் இதையெல்லாம் தயாரிப்பு நிறுவனமான லைக்கா கூறவில்லை. இணையத்தில் வெளியான புகைப்படங்களை பார்த்து தான் ரசிகர்கள் இதனை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டனர்.
படத்திற்கு அனிருத் இசையமைப்பதும் கடந்த மாதம் வரை உறுதியாக வில்லை. அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தான், அனிருத் பணியாற்றுவதை தெரிவித்து இருந்தார். இதனிடையே படப்பிடிப்பு தொடங்கி ஏழு மாதங்கள் ஆகியும் தயாரிப்பு நிறுவனம் தரப்பிலிருந்து ஒரு அப்டேட் கூட வெளியாகாமல் இருந்தது. சரி அஜித்தின் பிறந்தநாள் அன்றாவது ஏதாவது ரிலீஸ் செய்யப்படும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.
இதனிடையே இணையத்தில் புலம்பி கொண்டிருந்த ரசிகர்களை ஆறுதல் படுத்துவதற்காக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா விடாமுயற்சி சூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் காரில் அஜித் வேகமாக செல்ல அது கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் காட்சியாக இருந்தது. இதைப் பார்த்து பதில் போன அஜித் ரசிகர்கள் இனி அப்டேட் கேட்க மாட்டோம் என்று ஒதுங்கி கொண்டனர்.
சமீபத்தில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்ட நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அது மீண்டும் தொடங்கப்பட்டது. இதற்காக அஜித்தும் அஜர்பைஜான் நாட்டிற்கு சென்று இருக்கிறார். இந்த நிலையில் அவர் வெளிநாட்டில் கார் ரேஸில் ஈடுபடுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. இதைப் பார்த்து அஜித் ரசிகர்கள் பதறிப் போய் இருக்கிறார்கள். ஒருவேளை நம்ம தல மீண்டும் சுற்றுலா செல்ல ஆரம்பித்து விட்டாரோ என்று அவர்கள் புலம்பி வருகின்றனர்.





