நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தும் ஒரு படத்தில் நடிக்க ரூ. 200 சம்பளம் வாங்கும் டாப் லெவலில் இருந்தும் தொடர்ந்து சினிமாவில் நடிக்காமல், அரசியல் களத்தில் குதித்திருக்கிறார். சீனியர் நடிகர் சரத்குமார் போன்றவர்கள், நடிகர் விஜய் எடுத்துள்ளது தவறான முடிவாக கூட இருக்கலாம். ஏனெனில், நான் 1996ல் பெரிய நடிகராக இருந்த போது, அரசியலுக்கு வந்தது, மிகப்பெரிய தவறு என பின்னால் உணர்ந்தேன் என கூறியிருந்தார்.
ஏனெனில் டாப் லெவலில் இருக்கும் நடிகர்கள், அரசியல் களத்துக்குள் வரும்போது மக்களின் பார்வை வேறு மாதிரியாக இருக்கிறது. உதாரணமாக, நடிகர் கமல்ஹாசனை பிடித்த அளவுக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவராக கமல்ஹாசனை அனைவருக்கும் பிடிக்கவில்லை. தொடர்ந்து அவரால் அரசியல் களத்தில் நின்று ஜெயிக்க முடியாத நிலையில், யாரை எதிர்த்து அரசியல் செய்ய வந்தாரோ, அவர்களிடமே இப்போது தஞ்சமடைந்து அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்.
நடிகர் விஜய்க்கு மக்கள் ஆதரவு இருந்தாலும், அரசியல் களத்தில் அது எந்தளவுக்கு பெரிய வெற்றியை தேடித் தரப் போகிறது என்பதை, சட்டசபை தேர்தல் களம்தான் முடிவு செய்யும், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் திமுக, தனது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பணத்தை வாரி இறைக்கும் நிலையில், அதை எதிர்த்து, விஜய் களத்தில் வெற்றி பெறுவது சாத்தியம்தானா என்று மக்கள் பலரும் அங்கலாய்த்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, நடிகர் விஜய் அரசியலில் ஒருவேளை வெற்றி பெறாவிட்டால் 3 ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவுக்கு திரும்பும்போது, இப்போதுள்ள ஆதரவும், ரசிகர்களின் வரவேற்பு அப்போதும் கிடைக்குமா, என்பதை எதிர்பார்க்க முடியாது என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஒரு முக்கிய கருத்தை தெரிவித்து இருக்கிறார். ஏனெனில் சினிமா ரசிகர்களின் மனநிலை எப்படியும் மாற வாய்ப்பிருக்கிறது.
இதற்கிடையே இயக்குனர் பேரரசு, விஜயின் அரசியல் பயணம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். பேரரசு இயக்கத்தில் விஜய் நடித்த சிவகாசி, திருப்பாச்சி இரண்டுமே மிகப்பெரிய வெற்றிப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகாசி படத்தில் அசின், திருப்பாச்சி படத்தில் திரிஷா விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தனர்.
இயக்குனர் பேரரசு கூறுகையில், விஜய் நடித்த படங்கள், மக்களை நெருங்கி இருக்கிறது. அதே போல் அவரும் மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும். மக்களோடு மக்களாக பழக வேண்டும். ஊடகங்கள் மூலமாக, வெறும் அறிக்கைகள் மூலமாக அரசியல் பண்ண முடியாது, ஜெயிக்க முடியாது. இது அவருக்கும் தெரியும். மக்களோடு மக்களாக இறங்கினால்தான் விஜயை மக்கள் முழுமையாக நம்புவார்கள், என்று கூறியிருக்கிறார்.





