நடிகர் ஆர்ஜே பாலாஜி, துவக்கத்தில் ரேடியோ ஜாக்கியாக பணிசெய்து, மக்களிடம் அறிமுகமானவர். அதன்பிறகு நானும் ரவுடிதான், தீயா வேலை செய்யணும் குமாரு, தேவி, வடகறி, புகழ், கவலை வேண்டாம் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோக்களுடன் வந்து காமெடி செய்தார். ஆனால் காமெடியில் பெரிய அளவில் அவர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற முடியவில்லை.
இந்நிலையில் எல்கேஜி என்ற படத்தில் கதையின் நாயகனாக, இன்றைய அரசியலை அவரது பாணியில் கலாய்த்து நடித்திருந்தார், இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதன்பிறகு 2021ம் ஆண்டில் மூக்குத்தி அம்மன் என்ற படம், பெரிய அளவில் வெற்றி பெற்றது,
மூக்குத்தி அம்மன் படத்தில், மூக்குத்தி அம்மன் கேரக்டரில் நயன்தாரா நடித்திருந்தார். இந்த படத்தில் ஊர்வசி, ஊர்வசியின் மகனாக ஆர்ஜே பாலாஜி, நடித்திருந்தார். ஸ்ம்ருதி வெங்கட், மௌலி உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். கடவுளின் தூதுவர் என்ற பெயரில், மக்களின் சொத்துகளை அபகரிக்கும் ஒரு சாமியாரை, மூக்குத்தி அம்மனே நேரில் வந்து கேள்வி கேட்பது போல, படத்தின் கிளைமாக்ஸ் இருந்தது, ரசிகர்களை மிகவும் ரசிக்க வைத்தது.
இந்த படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், வீட்ல விசேஷம் என்ற படத்தை டைரக்ட் செய்தார் ஆர்ஜே பாலாஜி. அதுவும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. வளர்ந்த பிள்ளைகள் இருவர் வீட்டில் இருக்கும்போது 50 வயதுகளை கடந்த அம்மா, மீண்டும் கர்ப்பமாவதால் ஏற்படும் குடும்ப சிக்கல்களை மையப்படுத்திய இந்த படம், பெரிய அளவில் வெற்றி பெற்றது.
அடுத்து கோகுல் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி, மீனாட்சி செளத்ரி, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த சிங்கப்பூர் சலூன் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காததால், ஆர்ஜே பாலாஜி 3 ஆண்டுகளுக்கு பெரிய ஹிட் கொடுத்த மூக்குத்தி அம்மன் படத்தையே 2ம் பாகமாக எடுக்க தயாராகி விட்டார். ஆனால் அதில் கதாநாயகியாக, அம்மன் வேடத்தில் நயன்தாரா நடிக்கவில்லை.
நயன்தாராவுக்கு பதிலாக, மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்க திரிஷாவிடம் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், திரிஷா தான் அம்மனாக நடிக்க அதிக வாய்ப்பு என்றும் கூறப்பட்டது. ஆனால் இப்போது லேட்டஸ்ட் தகவலின்படி, மூக்குத்தி அம்மன் 2ம் பாகம், மாசாணி அம்மன் என்ற பெயரில் எடுக்கப்படும் நிலையில், இந்த படத்தில் நடிகை சமந்தா நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர் ஓகே சொல்லும் பட்சத்தில் திரிஷாவை ஓரம் கட்டிவிட்டு சமந்தாவுக்கு மூக்குத்தி, கிரீடம் சூட்டி விடுவார் ஆர்ஜே பாலாஜி என்று தெரிய வந்துள்ளது.





