நடிகர் விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய கம்பேக் கொடுத்துள்ள படம் மகாராஜா. கடந்த வாரத்தில் வெளியான இந்த படம், ரூ. 100 கோடி வசூலை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் இந்த படம், உலகத் தரம் வாய்ந்த படமாக பலரும் பாராட்டி வருகின்றனர். விஜய் சேதுபதிக்கு 50வது படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்குமே இந்த படம், ஒரு திருப்புமுனையை தந்திருக்கிறது. அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அவர்களை தேடி வருகின்றன. குறிப்பாக நட்டி, சிங்கம்புலி, முனீஷ்காந்த், அருள்தாஸ், மணிகண்டன், அனுராக் காஷ்யப், தேனப்பன் போன்றவர்கள் நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கின்றனர்.
மகாராஜா படத்தை பொருத்த வரை, படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை, பல இடங்களில் நிறைய திருப்புமுனை காட்சிகளும், சஸ்பென்ஸ் காட்சிகளும் நிறைந்திருக்கின்றன. வழக்கமாக படம் பார்க்கும் ரசிகர்கள் எளிதாக யூகித்துவிடும் திரைக்கதைக்கு மத்தியில், பல இடங்களில் ரசிகர்களே அட என வியக்கும் அளவுக்கு, டைரக்டர் நித்திலன் அசத்தி இருக்கிறார்.
இந்த படத்தை பார்த்து திரைபிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக பெண் குழந்தைகளை பெற்ற தகப்பன்களுக்கு இந்த படம் மிகவும் பிடித்திருக்கிறது. ஏனென்றால் தன் மகளுக்கு ஏற்படும் கொடூர நிலைக்கு காரணமானவர்களை விஜய் சேதுபதி ஒரு தகப்பனாக என்ன செய்கிறார் என்பதுதான் கதை.
இந்நிலையில் இந்த படத்தை நான் கண்டிப்பாக பார்க்க மாட்டேன், என்று பிரபல பின்னணி பாடகி சின்மயி பதிவு வெளியிட்டுள்ளார். அடிக்கடி சர்ச்சை கருத்துகளை வெளியிடுபவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே மீ டூ மூலம் பிரபல கவிஞர் சினிமா பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர்.
சின்மயி, பாடகி மட்டுமின்றி டப்பிங் கலைஞராகவும் உள்ள நிலையில் டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டு, இப்போது எந்த தமிழ் படத்திலும் அவர் பணியாற்றுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவர் தனது வலைதள பக்கத்தில், பாலியல் பலாத்காரம் மற்றும் துஷ்பிரயோகம் பற்றி பேசும் மகாராஜா படத்தில், பாடல் வரிகளை வைரமுத்து எழுதி இருக்கிறார் என்பதை வருத்தமுடன் அறிந்தேன். மகாராஜா படத்தில், வைரமுத்து எழுதிய பாடல் இடம்பெற்றிருப்பதால், அந்த படத்தை நான் பார்க்க மாட்டேன், என்று கூறியிருப்பது, ரசிகர்களிடையே கடுப்பை ஏற்படுத்தி இருக்கிறது.





