இயக்குனர் அமீர், தொடக்கத்தில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். அதனை தொடர்ந்து அமீர் “மௌனம் பேசியதே”, “பருத்திவீரன்” ஆகிய ஹிட் திரைப்படங்களை கொடுத்தார். பாலா ஒரு டெக்னீஷியனிடம் எப்படி வேலை வாங்குவார் என்பதை குறித்து சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். தான் நினைத்தபடி அவுட்புட் வரவேண்டும் என்பதற்காக பாலா நடிகர்களை அடிக்க கூட தயங்கமாட்டார் என்று பலரும் கூறுவது உண்டு. “இவர் என்னப்பா இப்படி டார்ச்சர் பண்றார்” என்று பலரும் பாலாவை விமர்சிப்பது உண்டு.

அப்படிப்பட்ட பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அமீரும் இதில் விதிவிலக்கு இல்லை என்பது போலத்தான் தெரிகிறது. சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட அமீர், “பருத்திவீரன்” திரைப்படத்தில் இடம்பெற்ற “ஐயையோ” என்ற பாடலை பாடவைக்க ஸ்ரேயா கோஷலை படாதபாடு படுத்திய சம்பவத்தை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
இந்த பாடலை ஸ்ரேயா கோஷல் பாடுவதாக ஒப்பந்தம் செய்திருந்தனராம். ஆனால் ஒப்பந்தமான இரண்டு வாரங்கள் கழித்துத்தான் ஸ்ரேயா கோஷல் சென்னைக்கு வந்தாராம். சென்னைக்கு வந்தவர் முதலில் வேறு சில இசையமைப்பாளர்களுக்கு 3 பாடல்களை பாடிவிட்டுத்தான் யுவன் ஷங்கர் ராஜாவிடன் வந்தாராம். காலையிலேயே 3 பாடல்கள் பாடிவிட்டதால் தான் சோர்வாக இருப்பதாக ஸ்ரேயா கோஷல் கூறியிருக்கிறார்.

அதற்கு அமீர், “இதெல்லாம் என்னுடைய பிரச்சனை இல்லை. இந்த பாடலை நீங்கள் இப்போதே பாடி முடித்துக்கொடுக்க வேண்டும்” என்று கறாராக கூறியிருக்கிறார். ஆதலால் வேறு வழியில்லாமல் ஸ்ரேயா கோஷல் ரெக்கார்டிங்கை தொடங்கியிருக்கிறார். ஆனால் அமீர் நினைத்தது போல் ஸ்ரேயா கோஷல் பாடவில்லையாம்.
“இந்த பாடலை படத்தில் 9 ஆம் வகுப்பு மாணவி பாடுகிறார். இதை நீங்கள் பாடுவது போல் பாடக்கூடாது” என அமீர் திட்டினாராம். அதன் பின் ஸ்ரேயா கோஷலின் தாயார் மேனேஜரிடம் “எதற்காக ஸ்ரேயாவை இப்படி கஷ்டப்படுத்துகிறீர்கள்?” என கேட்க, அதன் பின் மேனேஜர் அமீரிடம் ஸ்ரேயா கோஷல் மிகவும் சோர்வாக இருப்பதாக எடுத்து கூற, அதற்கு அமீர், “எனக்கு வேண்டியது கிடைத்தாக வேண்டும். நான் எதற்கும் காம்ப்ரமைஸ் ஆக மாட்டேன். வேண்டுமானால் ஸ்ரேயா கோஷல் வாங்கிய சம்பளத்தை கொடுத்துவிட்டு கிளம்ப செல்லுங்கள். நான் வேறு ஒருவரை வைத்து இந்த பாடலை ரெக்கார்ட் செய்துவிடுகிறேன்” என கூறினாராம்.
அமீர் இவ்வாறு பேசியது ஸ்ரேயா கோஷலின் ஈகோவை தொட்டுவிட்டதாம். அதன் பிறகுதான் இந்த பாடலை சவாலாக நினைத்து பாடியிருக்கிறார் ஸ்ரேயா கோஷல்.





