தமிழ் சினிமாவில் ஒரு கொடூரமான, மனதிற்கு மிகவும் தொந்தரமான ஒரு காட்சி இருக்கிறது என்றால் அது நிச்சயம் பாலா படமாக தான் இருக்கும். இயக்குனர் பாலு மகேந்திரா பட்டறையில் இருந்து உருவான பாலா, சீயான் விக்ரமை வைத்து சேது திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தார்.
துருதுருவென இருக்கும் இளைஞன், ஒரு கட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட, அதன் பிறகு என்ன ஆனது என்பதைத்தான் கதைக்களமாக கொண்டு அந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. ரசிகர்களின் மனதுக்கு மிகவும் நெருக்கமான, தாங்கிக் கொள்ளவே முடியாத ஒரு கிளைமாக்ஸ் கட்சியை கொடுத்து நடுங்க வைத்தார் பாலா.
சேதுவுக்கு பிறகு பாலா தொட்ட திரைப்படங்கள் அத்தனையும், பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தன. சூர்யாவுக்கு நந்தா எனும் திரைப்படத்தை கொடுத்து, அவரது திரையுலகப் பயணம் முன்னேற படிக்கட்டுகளாக இருந்தார். இதே போல் அடுத்ததாக சீயான் விக்ரமை வைத்தும் பிதாமகன் படத்தை இயக்கினார்.
இந்த திரைப்படத்தில் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்திய விக்ரம் தேசிய விருதை அள்ளினார். அதேபோல் மிக ஜாலியான ஒரு திரைப்படத்தில் நடித்து, தனது அத்தனை பிம்பங்களையும் உடைத்தெறிந்தார் சூர்யா. பிதாமகன் திரைப்படம் மூலம் பாலா தொட்ட உயரம் மிகப்பெரியது என்று நிச்சயம் கூறலாம். இதன் பிறகு அவர் இயக்கத்தில் வெளிவந்த நான் கடவுள் திரைப்படமும், தமிழ் சினிமாவில் இதுவரை எடுக்கப்படாத புதிய களத்தில் மைல்கல்லாக அமைந்தது.
இப்படி தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தை எப்போதும் இயக்கும் பாலா, அதன் பிறகு ஒரே கதை அம்சம் கொண்ட படங்களை எடுக்க ஆரம்பித்ததால் மிளிர தவறினார். பாலா திரைப்படம் அப்படி என்றால் யாராவது ஒருவர் அதில் இறந்து விடுவார்கள் என்ற பொதுவான விமர்சனம் அவர் திரைப்படத்திற்கு எழ ஆரம்பித்தது. இதனால், அவன் இவன், நாச்சியார் உள்ளிட்ட திரைப்படங்கள் கவனத்தை பெறவில்லை.
கடைசியாக அவர் சூர்யாவை வைத்து வணங்கான் திரைப்படத்தை எடுத்தார். ஆனால் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இவர்கள் கூட்டணி முறிந்தது. இந்நிலையில், சூர்யா கதாபாத்திரத்திற்கு நடிப்பதற்காக அருண் விஜய் உள்ளே வந்தார். காது பேசாத மற்றும் வாய் பேச முடியாத ரோலில் அவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. சமுத்திரக்கனி, மிஷ்கின், ரோஷினி பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. ஒரு கொலையை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு இருப்பது ட்ரெய்லர் மூலம் தெரிகிறது. அனேகமாக அடுத்த மாதம் வணங்கான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.





