பட்டிமன்ற பேராசிரியர் நடுவர் சாலமன் பாப்பையா தனது 90வது வயதில் உடல் மூப்பு காரணமாக மறைந்தார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் அறிவிப்பில் கூறியிருப்பதாவது, தமிழின் பெருமையையும் தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறிய செய்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரமும் வேதனையும் அடைந்தேன்.
தமது நகைச்சுவை கலந்த பேச்சாலும் ஆழ்ந்த தமிழ் புலமையாலும் சமூக சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல் சிந்தனையை தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் பங்கு மகத்தானது. அவரது மறைவு தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஈடு செய்ய முடியாத இயலாத பேரிழப்பாகும் என்று முதல்வர் விஜய் கூறியிருக்கிறார்.
சிவாஜி படத்தில் ரஜினியுடன் சில காட்சிகளில் சாலமன் பாப்பையா நடித்திருந்த நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, படித்தவர் இடையே இலக்கிய தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடம் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேரசிரியர் சாலமன் பாப்பையாவின் சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று ரஜினிகாந்த் அதில் குறிப்பிட்டுள்ளார்.
கவிஞர் வைரமுத்து இன்று தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது, சாலமன் பாப்பையாவின் மறைவு உள்ளத்தை உடைக்கிறது. பாரதி மறைந்தநாளில் பாப்பையாவும் மறைந்திருக்கிறார். செப்டம்பர் 11 தமிழுக்கு நல்லநாள் இல்லை போலும். பட்டிமன்றத் தமிழ் முடிந்துவிட்டதா? பாமரத் தமிழ் மூச்சை நிறுத்திக்கொண்டதா?
கல்லூரிகளில் பயிற்றுவித்த தமிழைக் கடைவீதிக்குக் கொண்டு சேர்த்தவர்
சாலமன் பாப்பையா. இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் நூலில் அவர் குறித்தும் எழுதியிருக்கிறேன். சிரிக்க வைத்துச் சிந்திக்கவும் வைத்த மேடைக் கலைவாணர் மறைந்துவிட்டார். அவரது நாற்காலி காலியாகவே இருக்கும்; நிரப்ப முடியாது.
மதுரைக்கே ஒரு வெறுமை வந்துவிட்டது; மனம் கலங்குகிறது அவரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும் உலகத் தமிழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று கவிஞர் வைரமுத்து அந்த பதிவில் கூறியிருக்கிறார். பல்வேறு திரை பிரபலங்கள் எழுத்தாளர்கள் கவிஞர்கள் சாலமன் பாப்பையா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.





