கடந்த 2020ம் ஆண்டில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஓடிடி தளத்தில் வெளியான படம் மூக்குத்தி அம்மன். கோவித் தொற்று காரணமாக இந்த படத்தை நேரடியாக தியேட்டர்களில் வெளியிட முடியாமல், டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியீடு செய்யப்பட்டது. இந்த படம், மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை ஆர்ஜே பாலாஜி, என்ஜே சரவணன் இருவரும் இணைந்து இயக்கி இருந்தனர். இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம்ங சார்பில், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். இதில் மூக்குத்தி அம்மனாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். ஆர்ஜே பாலாஜி, ஊர்வசி, மௌலி, அஜய் கோஷ், ஸ்மிருதி வெங்கட், இந்துஜா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில், இந்த படத்தை 2ம் பாகமாக எடுக்க படத்தின் நாயகன் மற்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி முடிவு செய்தார். அதன்படி இந்த படத்தின் 2ம் பாகத்துக்கு மாசாணி அம்மன் என பெயர் வைக்கப்பட்டது. இந்த படத்தில் திரிஷா மூக்குத்தி அம்மனாக நடிக்கவும் முடிவானது. இதுபற்றிய தகவல்கள் சமீபத்தில் வெளியானது.
மாசாணி அம்மன் படத்தை பேஷன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதன் தயாரிப்பதாகவும், இந்த படத்தில் திரிஷா, சமந்தா இருவரில் ஒருவர் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட நிலையில், சமந்தா மிக அதிகமாக சம்பளம் கேட்டதால், திரிஷா மூக்குத்தி அம்மன் கேரக்டரில் நடிக்க சம்மதித்ததாகவும் கூறப்பட்டது.
இதற்கிடையே நேற்று வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிட்ட திடீர் அறிவிப்பில் மூக்குத்தி அம்மன் 2 படத்தை எடுக்க உள்ளதாகவும் அந்த படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதாவது மூக்குத்தி அம்மன் படத்தை 2வது பாகமாக எடுக்க முடிவு செய்த ஆர்ஜே பாலாஜி, வேல்ஸ் நிறுவனத்திடம் அதுபற்றி பேசியுள்ளார். ஆனால் அதற்கு சம்மதிக்காத தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், மூக்குத்தி அம்மன் படம் 2ம் பாகத்தை தனது நிறுவனமே தயாரிக்கும் என்றும், அதிலும் நயன்தாரா தான் நடிக்கிறார் என்றும் அறிவித்துள்ளது. ஆனால் இயக்குனர் பெயரை அறிவிக்கவில்லை. இப்படி வீம்புக்கு வேல்ஸ் பிலிம்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், உண்மையான மூக்குத்தி அம்மன் 2ம் பாகம் எது, என்ற குழப்பம் கோலிவுட்டில் ஏற்பட்டுளு்ளது.





