மணிரத்னம் இயக்கத்தில், வேலுநாயக்கர் கேரக்டரில் கமல்ஹாசன் நடித்த படம் நாயகன். 1987ம் ஆண்டில் வெளிவந்த நாயகன், சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த கலை இயக்குநர் என முறையே கமல், பிசி ஸ்ரீராம், தோட்டாதரணி ஆகியோருக்கு தேசிய விருதுகளை பெற்றுத் தந்த படமாக அமைந்தது.
வரும் நவம்பர் 3ம் தேதி, நாயகன் படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ரீ ரிலீஸ் ஆகிறது. பிலிம் ரோலில் எடுக்கப்பட்ட இந்த படம் டிஜிட்டலில், ஒலி ஒளி ஏற்றப்பட்டு புது மெருகுடன் வெளிவருகிறது. கமல் பிறந்தநாளில், அவரது ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
நாயகன் படத்துக்கு பிறகு, 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிக்கிறார். ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 மற்றும் 3 படங்கள், எச். வினோத் படத்தை முடித்துவிட்டு, மணிரத்னம் படத்தில் கமல் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நாயகியாக, முதல்முறையாக நயன்தாரா, கமலுடன் ஜோடி சேருகிறார்.
வரும் நவம்பர் 7ம் தேதி, கமல்ஹாசனின் பிறந்த நாள் வருகிறது. இதையொட்டி, அன்று ரசிகர்களுக்கு அன்பு பரிசாக மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் புதிய படத்தின் டீசர் வெளியிடப்படுகிறது. இதற்காக சில தினங்களாக படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் டீசர் எடுக்கப்படும் முன்பு, மணிரத்னம் – கமல் இணையும் படத்திற்கான துவக்கவிழா பூஜை நடந்திருக்கிறது. வெளியான இந்த பூஜை வீடியோவில் கமல்ஹாசன், மணிரத்னம், படத்தின் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான், ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ், ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
இந்த வீடியோவில் நடிகை குஷ்புவின் மகள் அவந்திகா கலந்துக்கொண்டு இருக்கிறார். குஷ்பு கமலுடன் சில படங்களில் நடித்த வகையில் அவரது நெருங்கிய நண்பர். அதனால், இந்த படத்தில் அவந்திகா நடிக்க வைக்க குஷ்பு, கமல் மூலம் மணிரத்னத்திடம் சிபாரிசு செய்திருப்பார் என ரசிகர்கள் மத்தியில் தகவல் பரவியது. ஆனால் உண்மை அதுவல்ல. இந்த படத்தில் அவந்திகா நடிக்கவில்லை. பேசன் டிசைனிங் தொழில்நுட்ப கலைஞராக, டெக்னிக் சார்ந்த பணிகளை இந்த படத்தில் அவர் செய்ய இருப்பது, உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.





