நடிகர் கமல்ஹாசன், 5 வயதில் இருந்து சினிமாவில் இருப்பவர். துவக்கத்தில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் போன்ற ஜாம்பவான் நடிகர்களுடன் சிறுவனாக நடித்த கமல், அந்த வயதிலேயே அவர்களது தோள்களில், மடிகளில் தவழ்ந்து விளையாடியவர். அதனால் எப்போதுமே எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி கணேசன் போன்றவர்களுக்கு கமல் மிகவும் பிடித்தமானவராக இருந்தார்.
தமிழக முதலமைச்சரான பிறகு, எம்ஜிஆர் ஒருமுறை வெளியூரில் விழா ஒன்றில் பங்கேற்க சென்றபோது, கமல் அருகில் உள்ள பகுதியில் படப்பிடிப்பில் இருக்கிறார் என்ற தகவல் தெரிய வந்திருக்கிறது. கமலை பார்த்து ரொம்ப நாட்கள் ஆகி விட்டதே, என புரட்சித் தலைவர் எம்ஜிஆரே நேரடியாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று கமலை சந்தித்து பேசியிருக்கிறார்.
அதே போல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டில் இப்போதும் கமல் மூத்த மகனாக தான் பார்க்கப்படுகிறார். அந்தளவுக்கு பிரபு, ராம்குமாரை விட கமல்தான் சிவாஜி கணேசனிடம் அதிகமாக இருந்தவர் என்று கூறப்படுவது உண்டு. தனிப்பட்ட முறையில் கமல் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் ஒரு நடிகராக அவருக்கு வாழ்க்கை அளித்த வாய்ப்புகளும், சினிமா தந்த வாய்ப்புகளும் மிக மிக அதிகமாக இருக்கிறது.
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் நல்ல கதைகளுக்கு மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டுள்ளது. எல்லா பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் எல்லாமே இந்தி, மலையாளம் படங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்ட கதைகள்தான். இதில் லோகேஷ் கனகராஜ், வெங்கட்பிரபு, மகிழ்திருமேனி போன்றவர்கள் ஹாலிவுட் படங்களில் இருந்து கதையை சுருட்டி விடுகின்றனர்.
சொந்தமான கதைகள், திரைக்கதைகள் என்பதெல்லாம் பாக்யராஜ், டி ராஜேந்தர் போன்றவர்களுக்கு கைவந்த கலையாக இருந்தது. அவர்கள் நிறைய படித்தார்கள். அதனால் கற்பனை வளம் அவர்களுக்கு கொட்டியது. நிறைய விஷயங்களை யோசித்து யோசித்து சிறப்பான திரைக்கதையாக மாற்றி, நல்ல படங்களை ரசிகர்களுக்கு தந்தார்கள்.
அதனால் பல இயக்குனர்கள், நடிகர்களிடம் தங்களது புது சரக்கு போல ஏதோ ஒரு படத்தின் கதையை பட்டி, டிங்கிரிங் பார்த்து பெரிய நடிகர்களிடம் சொல்லி ஓகே வாங்கி விடுகின்றனர். ஆனால் நடிகர் கமல்ஹாசனிடம் இப்படி ஏதாவது ஒரு படத்தின் கதையை அப்படி, இப்படி மாற்றிச் சொன்னாலும் கடைசியில் அது இந்த ஹாலிவுட் படம்தானே, இது அந்த இந்தி படம்தானே, இது மலையாள படமாச்சே, இது தெலுங்கில் வந்துவிட்டதே என உடனே கூறிவிடுவாராம். ஏனெனில் உலக நாயகன், உலக சினிமா ரசிகராக இருப்பதால் அவருக்கு தெரியாத கதைகளே இல்லை. அதனால் எந்த டைரக்டராக இருந்தாலும், கதை சொல்லும் விஷயத்தில் கமல்ஹாசனிடம் எளிதில் சிக்கிக்கொள்கின்றனர் என்று வலைப்பேச்சு பிஸ்மி, வீடியோ ஒன்றில் கூறியிருக்கிறார்.





